Published : 10 Mar 2021 02:59 PM
Last Updated : 10 Mar 2021 02:59 PM
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்களிக்கப் போதுமான கால அவகாசம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குகள் பதிவு செய்வதிலும் நடைமுறைச் சிக்கல் உள்ளதாகக் கூறி, தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன், சம்பந்தப்பட்ட தொகுதியில் அவர்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகளை அறிவிக்கக் கோரி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் அதன் நிறுவனர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், சொந்தத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், தேர்தல் பணி சான்றிதழ் சமர்ப்பித்து வாக்களிக்கவும், பிற தொகுதி அல்லது பிற மாவட்டங்களில் பணியமர்த்தப்படும் ஊழியர்கள் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான வாக்குச்சீட்டுகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு கடைசிக் கட்டப் பயிற்சியின்போது வழங்கப்படுகிறது எனவும், அந்த வாக்குச் சீட்டில் அதிகாரிகளின் அத்தாட்சியைப் பெற வேண்டியுள்ளதாகவும், அத்தாட்சி பெற்றாலும் பணியமர்த்தப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல வேண்டிய காரணத்தினால் தபால் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.
தபால் வாக்குகள் செலுத்தினாலும், சில நேரங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகுதான், அந்த வாக்குச்சீட்டுகள், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியைச் சென்றடைவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது 4 லட்சத்து 35 ஆயிரத்து 3 ஊழியர்களில், 3 லட்சத்து 97 ஆயிரத்து 697 பேர் தபால் மூலம் வாக்களித்தனர் என்றும், இதில் 37 ஆயிரத்து 712 பேர் வாக்குகளைச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குகளைச் செலுத்திய 3 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேரில், 24 ஆயிரத்து 912 பேருடைய வாக்குச்சீட்டுகள் அதிகாரிகளின் அத்தாட்சி இல்லாததால் நிராகரிக்கப்பட்டதன் மூலம் மொத்தமாக 62 ஆயிரத்து 624 பேர் வாக்குகள் வீணாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 374 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், கரோனா தொற்று காரணமாக இந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 90 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக தேர்தல் பணிக்கு 6 லட்சம் பேர் அமர்த்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் எனவும், தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்க, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தனி வாக்குச்சாவடிகளை அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று (மார்ச் 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
சொந்தத் தொகுதிக்கு வெளியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மின்னணு மூலம் வாக்களிக்க அனுமதி வழங்க இயலாது எனவும், தபால் மூலம் அவர்கள் வாக்களிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, போதுமான ஊதியம் இல்லாமல் துணிச்சலாகத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜனநாயகம் வழங்கியுள்ள முக்கியமான அடிப்படை உரிமையான வாக்குரிமையை மறுக்கக் கூடாது என அறிவுறுத்திய நீதிபதிகள், அவர்கள் தபால் மூலம் வாக்களிக்கப் போதிய கால அவகாசம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
மேலும், வாக்களிக்கத் தவறியவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதையும் உறுதி செய்யத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT