Published : 10 Mar 2021 01:53 PM
Last Updated : 10 Mar 2021 01:53 PM
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கோவை தெற்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படலாம் என்கிற நிலையில், அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக கொங்கு மண்டலம் அதிமுகவுக்குச் செல்வாக்கான ஒன்று. கோவை தெற்கு தொகுதி அதிமுகவின் கோட்டையாக இருக்கும் தொகுதி. இங்கு தொடர்ச்சியாக 2011, 2016-ல் அதிமுக வென்றது. கடந்த தேர்தலில் மும்முனைப் போட்டியில் கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது.
அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் 59,788 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கட்சியின் மயூரா எஸ்.ஜெயக்குமார் 42,369 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் 33,000 வாக்குகள் பெற்றார்.
இதனால் இம்முறை அதிமுக கூட்டணிக்கு பாஜக ஒப்புக்கொண்டதும் அவர்கள் முதல் சாய்ஸ் கோவை தெற்கு தொகுதியாக இருந்தது. அதிமுகவின் கோட்டையாக உள்ள தொகுதிகளைக் குறிவைக்கும் பாஜக கோவை தெற்கையும் கேட்டு நெருக்கி வாங்க உள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால் அங்குள்ள அதிமுகவினர் கொந்தளித்துப் போயுள்ளனர்.
இன்று காலை அதிமுக அலுவலகம் முன் திரண்ட அதிமுக தொண்டர்கள் கோவை தொகுதி வேண்டும் என கோஷமிட்டனர். கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கக் கூடாது என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை தெற்கு தொகுதியில் அம்மன் அர்ஜுனனுக்கே இந்தத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகள், அனைத்து வார்டு, அனைத்து அமைப்புச் செயலாளர்கள் சார்பாக வலியுறுத்துகிறோம். 5 பகுதி செயலாளர்கள் சார்பில் ராஜினாமா கடிதத்தைத் எழுதி தயாராக வைத்து வலியுறுத்துகிறோம். அவருக்குத் தொகுதியை ஒதுக்காவிட்டால் கூண்டோடு ராஜினாமா செய்வோம் என வலியுறுத்தினர்.
அம்மன் அர்ஜுனன் இந்தத் தொகுதியை அரும்பாடுபட்டு மாற்றி வைத்துள்ளார். அதிமுகவின் செல்வாக்குள்ள தொகுதியை விட்டுத்தர மாட்டோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தினர். இதன் மூலம் கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக தயக்கம் காட்டலாம் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT