Published : 10 Mar 2021 11:12 AM
Last Updated : 10 Mar 2021 11:12 AM

திமுக தொகுதிப் பட்டியல், முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்: இன்று மாலை வெளியிடுகிறார் ஸ்டாலின்

சென்னை

திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிகளை இறுதிப்படுத்திய நிலையில், திமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலையும், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் இன்று மாலை ஸ்டாலின் வெளியிடுகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த 5 ஆண்டுகளாக திமுகவுடன் பல்வேறு போராட்டங்களில் ஒன்றிணைந்து மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துப் போராடி தோழமைக் கட்சிகளாக நின்ற நிலையில், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் கடும் இழுபறி நீடித்தது.

பின்னர் ஒருவாறாக தோழமைக் கட்சிகள் திமுகவுடன் ஒப்பந்தம் செய்தன. இதில் காங்கிரஸ் 25 தொகுதிகளும், இடதுசாரிகள், மதிமுக, விசிக ஆகியவை தலா 6 தொகுதிகளும், கொமதேக 3, ஐயூஎம்எல் 3, மமக 2, தமிழக வாழ்வுரிமைக்கட்சி, ஆதித் தமிழர் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி என 54 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் நிற்கின்றன.

இதில் திமுகவினர் 174 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். 13 தொகுதிகளில் கூட்டணிக் கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதன் மூலம் உதயசூரியன் சின்னம் 187 இடங்களில் போட்டியில் உள்ளது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் பெரும்பாலும் தொகுதிகளை திமுக இறுதிப்படுத்திவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிகள் இறுதியான நிலையில் திமுக தொகுதிப் பட்டியலையும், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுகிறார். இம்முறை திமுக வேட்பாளர் பட்டியலில் 30 பேர் வரை புதுமுகங்கள் இருக்க வாய்ப்பு என்றும், மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் சிலருக்கு இம்முறை வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

சென்னையில் ஓரிரண்டு தொகுதிகள் தவிர முழுவதும் திமுக போட்டியிடும் எனத் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x