Published : 09 Mar 2021 10:28 PM
Last Updated : 09 Mar 2021 10:28 PM

செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் உத்தரவு

செங்கல்பட்டு எஸ்.பி., டி.கண்ணனை சஸ்பெண்ட் செய்ய தமிழகத் தலைமைச் செயலாளருக்குத் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த அதிகாரி, அண்மையில் முதல்வர் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணம் சென்றபோது, முதல்வரை வரவேற்க வந்த மாவட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் அத்துமீறியதாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண் எஸ்.பி. சென்னையில் டிஜிபியிடம் புகார் அளிப்பதற்காகத் தனது காரில் சென்றபோது, செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் வழிமறித்து, டிஜிபியிடம் புகார் செய்ய வேண்டாம், இதனால் தேவையில்லாத பிரச்சினை ஏற்படும் என்று மிரட்டல் தொனியில் கூறியதாகவும் சர்ச்சை கிளம்பியது.

இந்த இரு சர்ச்சைகளும் பூதாகரமாக, அடுத்தடுத்து வழக்குப் பதிவு, நீதிமன்ற விசாரணை, சிபிசிஐடி விசாரணை என அதிர்வலைகள் ஏற்பட்டன.

பெண் எஸ்.பி.யைத் தடுத்து மிரட்டியது தொடர்பாக தொடர்பாக எஸ்.பி. கண்ணன் மீது ஐபிசி பிரிவு 354 A (2), 341, மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, விழுப்புரம் சிபிசிஐடி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வாயிலாக கேட்டுக் கொண்டதன்படி, தேர்தல் ஆணையம் முதலில் அவரைத் தேர்தல் பணியல்லாத வேறு பணிக்கு மாற்றும்படி தமிழக உள்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, அவர் நேற்று, வணிக குற்றப்பிரிவு எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், எஸ்.பி. கண்ணன் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பான தமிழக உள்துறையின் அறிக்கையை தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் கண்ணனை சஸ்பெண்ட் செய்யும்படியும், அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படியும் தேர்தல் ஆணையம் தமிழக தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x