Published : 09 Mar 2021 07:31 PM
Last Updated : 09 Mar 2021 07:31 PM

கொமதேகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு: உதயசூரியன் சின்னத்தில் போட்டி- திமுக 174 இடங்களில் போட்டி

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் பெஸ்ட் ஈஸ்வரன் பேசுகையில், "திமுக கூட்டணியில் எங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதி என்பது பின்னர் பேசி முடிவெடுக்கப்படும். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். கொங்குநாட்டில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுகவின் வெற்றிக்குப் பாடுபடுவோம்" என்றார்.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவரம்:

திமுக கூட்டணியில் கடந்த 1-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட், மதிமுகவுக்கு தலா 6 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. நீண்ட இழுபறிக்குப் பின்னர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. நேற்று, ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலைக் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

கொமதேகவுடனான தொகுதிப் பங்கீடு மட்டும் முடிவடையாமல் இருந்த நிலையில், இன்று அக்கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இதுவரை 11 கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான தொகுதி எனக் கூறப்படுகிறது.

இதில் சிறிய கட்சிகள் எல்லாம் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x