Published : 09 Mar 2021 07:13 PM
Last Updated : 09 Mar 2021 07:13 PM
மதுரை தெப்பக்குளம் தொடர்ந்து 103 நாட்களாக 12 1/2 அடி வரை தண்ணீர் நிரம்பி காணப்படுவது, சுற்றுலாப்பயணிகளையும், உள்ளூர் மக்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இப்படி தொடர்ந்து 100 நாட்களைக் கடந்து தண்ணீர் நிரம்பி காணப்படுவது கால் நூற்றாண்டில் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் கவர்ந்த இடங்களில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் முக்கியமானது.
கடந்த காலங்களில் ஏராளமான திரைப்படங்களின் ஷூட்டிங் இந்த தெப்பக்குளத்தில் எடுக்கப்பட்டன. அந்தளவிற்கு இந்த தெப்பக்குளம் பெருமையும், பிரபலமும் மிக்கது.
பருவமழை பெய்யும் காலங்களில் மழைநீரால் இக்குளம் நீர் நிரம்பிக் காணப்படும். மற்ற இடைப்பட்ட காலத்தில் வைகை ஆற்றில் ஓடும் தண்ணீர் கால்வாய் வழியாக இந்த குளத்திற்கு வரும். அதனால், ஆண்டு முழுவதுமே கடல் போல் இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது.
கடந்த கால்நூற்றாண்டாக, இந்த குளத்தின் நீர் வரத்து கால்வாய்கள் பராமரிப்பு இல்லாததால் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரத்து நின்று போனது.
அதனால், தெப்பக்குளம் நிரந்தர வறட்சிக்கு இலக்காகி சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் மைதானமாக மாறியது. மாநகராட்சி நிர்வாகமும், மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகமும் குளத்தை பராமரித்து வைகை ஆற்றில் இருந்து மீண்டும் தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என்று உள்ளூர் மக்களும், சுற்றுலாப்பயணிகளும் எதிர்பார்த்தனர்.
அதன் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம், பழைய நீர் வரத்து கால்வாய்களை தூர்வாரி வைகை ஆற்றில் இருந்து தெப்பக்குளுத்திற்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்தது.
அதனால், தெப்பக்குளத்தில் தண்ணீர் குறைய குறைய, வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. தற்போது நேற்றுடன் சேர்த்து தொடர்ந்து 103 நாட்களாக தெப்பக்குளத்தில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.
தெப்பக்குளம் மொத்தம் 14 1/2 அடி ஆழம் கொண்டது. தற்போது அதில் 12 அடியில் தொடர்ந்து தண்ணீர் காணப்படுகிறது. தெப்பக்குளத்தில் தற்போது படகுசவாரியும் விடப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகளும், உள்ளூர் மக்களும் காலை, மாலை நேரங்களில் படகுகளில் சென்று தெப்பக்குளத்தின் அழகை ரசித்து வருகின்றனர்.
இதுவரை திரையரங்குகளைவிட்டால் பொழுதுப்போக்குவதற்கு வேறு இடங்கள் இல்லாமல் இருந்தநிலையில் உள்ளூர் மக்களுக்கு இந்த தெப்பக்குளம் தற்போது முக்கியப் பொழுதுப்போக்கு அசம்சமாக உள்ளது.
இதுகுறித்து மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த என்.நரேந்திரபாபு கூறுகையில், ‘‘40 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு நாட்கள் தண்ணீர் நிரம்பி காணப்படுவது இதுவே முதல் முறை. ஒரு மாதம் முதல் அதிகப்பட்சம் 50 நாட்கள் வரை, அதுவும் மீனாட்சியம்மன் கோயில் தெப்ப உற்சவம் காலங்களில் மட்டுமே தண்ணீர் நிரம்பி காணப்படும்.
அதுவும் மின் மோட்டார்களை கொண்டு வைகை ஆற்று ஆள்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து நிரப்பப்படும். அந்தத் திருவிழா காலங்கள் முடிந்ததும் மின்மோட்டார்களை கழற்றி எடுத்து சென்றுவிடுவார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக வைகை ஆறும் வறண்டு காணப்பட்டதால் அந்தத் தண்ணீரும் இல்லாமல் இருந்தது. தற்போது 103 நாட்களாக தண்ணீர் நிரம்பி காணப்படுவது ஆச்சரியமாக உள்ளது, ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT