Last Updated : 09 Mar, 2021 07:00 PM

 

Published : 09 Mar 2021 07:00 PM
Last Updated : 09 Mar 2021 07:00 PM

கோவை பரளிக்காடு சூழல் சுற்றுலா மார்ச் 13-ம் தேதி தொடக்கம்: ஆன்லைனில் முன்பதிவு அவசியம்

பரளிக்காடு சூழல் சுற்றுலாவில் இடம்பெறும் பரிசல் பயணம். | கோப்புப் படம்.

கோவை

கரோனா பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா வரும் 13-ம் தேதி மீண்டும் தொடங்க உள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது பரளிக்காடு. கோவை காந்திபுரத்தில் இருந்து 70 கி.மீ. தூரம் பயணித்தால் இயற்கை எழில் மிகுந்த இந்த இடத்தை அடையலாம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். பரளிக்காடு செல்ல வனத்துறையினரிடம் முன்பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் 30 கி.மீ. பயணித்து காரமடையை அடைந்து, அங்கிருந்து 40 கி.மீ. பில்லூர் சாலையில் வெள்ளியங்காடு, முள்ளி சோதனைச்சாவடியைக் கடந்து பயணித்தால் பரளிக்காட்டை அடையலாம்.

பரளிக்காடு செல்ல விரும்புவோர் https://coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் நாளை (மார்ச் 10) காலை முதல் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம் எனவும், மொத்தம் 120 பேர் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் வனத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாகக் காரமடை வனச்சரக அலுவலர் மனோகரன் கூறும்போது, ''பரளிக்காடு பரிசல் பயணத்துக்கென 20 பரிசல்கள் தயார் நிலையில் உள்ளன. 20க்கும் அதிகமான ஓட்டுநர்கள் உள்ளனர். 'லைஃப் ஜாக்கெட்' அணிந்து ஒரு பரிசலில் 4 பேர் பயணிக்கலாம். பரிசல் பயணத்துக்கு, காலை 10 மணிக்கு முன்பாக அங்கு இருக்க வேண்டும். அங்கு சென்றடைந்தவுடன் சுக்கு காஃபி வழங்கப்படும். பரிசல் பயணத்துக்குப் பின் ஓய்வெடுத்தால் பழங்குடியின மக்கள் சமைத்த மதிய உணவு தயாராக இருக்கும்.

மதிய உணவில் கேசரி, வெஜிடபிள் பிரியாணி, சப்பாத்தி, குருமா, தயிர் பச்சடி, சிக்கன் குழம்பு, களி, கீரை, தயிர் சாதம், வாழைப்பழம், சாப்பாடு, ரசம், வடகம் மற்றும் கேரட், வெள்ளரி, வெங்காயம் அடங்கிய வெஜிடபிள் சாலட் வழங்கப்படும். அதன் பிறகு, ஆற்றில் குளியல், வனப்பகுதியை ஒட்டி நடைப்பயிற்சி இருக்கும். இதற்குப் பெரியவர்களுக்குக் கட்டணமாக ரூ.550, சிறுவர்களுக்குக் கட்டணமாக ரூ.450 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாலித்தீன் கவர்கள், பிளாஸ்டிக் கப்களைப் பயன்படுத்தக்கூடாது. முன்பதிவு தொடர்பான சந்தேகங்கள், கூடுதல் விவரங்களுக்கு 9489968480, 9442701530 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்'' என்று மனோகரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x