Published : 09 Mar 2021 05:14 PM
Last Updated : 09 Mar 2021 05:14 PM
திமுக எங்களால் ஆட்சிக்கு வந்தால் சந்தோஷம் என, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.
கேட்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்ததால், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று (மார்ச் 9) அறிவித்தார்.
இதையடுத்து, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், அதிமுகவுக்கு எதிராகப் பேசினார். தேமுதிக சத்ரியனாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி மண்ணைக் கவ்வுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன் பின்னர், அவர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது ஏன்?
அதிமுகவை நாங்கள் உச்சத்தில் வைத்துப் பார்த்தோம். எங்களைக் கீழே தள்ள வேண்டும் என்று நினைத்தனர். அதனால்தான் இந்த முடிவு.
தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
பேச்சுவார்த்தைக் குழுவில் நான் இல்லை. கூட்டணி குறித்து நான் எதுவும் பேசவில்லை. குழுவில் இருந்த துணைச் செயலாளர் பார்த்தசாரதியைத்தான் கேட்க வேண்டும்.
முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடி ஆகியோருக்குச் சவால் விட்டுள்ளீர்களே?
நான் இருவருக்கும் சவால் விடவில்லை. என்ன நடக்கப் போகிறதோ அதைத்தான் சொன்னேன்.
வாக்கு வங்கி அதிகமாக இருப்பதாகச் சொல்கிறீர்களே? மக்கள் ஏன் உங்களை நம்புவதாக நினைக்கிறீர்கள்?
ஊழல் செய்யாத ஒரே கட்சி தேமுதிகதான். அதுவே பெரிய தகுதி. அதனால் தான் மக்கள் எங்களை நம்புகின்றனர். 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தவறு என, பொருளாளர் பிரேமலதா சொல்லிக்கொண்டே இருப்பார். அதனால், இப்போது நாங்கள் தனியாக இருக்கிறோம். உடல்நிலை சரியில்லையென்றாலும் மக்களுக்காகப் போராடும் ஒரே தலைவர் விஜயகாந்த். அதனால், மக்கள் எங்களை நிச்சயம் நம்புவார்கள். ஒரு இளைஞனாக நான் இங்கு வந்திருக்கிறேன். நான் இந்த வயதில் இங்கு வந்து கஷ்டப்படுவதை மக்கள் பார்க்கிறார்கள். இதனால், மக்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என நம்புகிறேன்.
சத்ரியனாக பார்க்கப் போகிறீர்கள் எனச் சொல்லியுள்ளீர்களே?
இவ்வளவு நாட்கள் நாங்கள் சத்ரியனாக இருந்தோம். அதில் சாணக்கியத்தனம் இருந்தது. இனி முழுக்க முழுக்க சத்ரியனாக மட்டும்தான் பார்ப்பீர்கள்.
யார் வாரிசு அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக நினைக்கிறீர்கள்?
வாரிசு இருப்பவர்கள் வாரிசு அரசியல் குறித்துப் பேசுகின்றனர். அதில் என்ன தவறு இருக்கிறது. நான் அரசியலுக்கு வரக்கூடாது என யாரும் சொல்ல முடியாது. நான் வேறு கட்சிக்குச் சென்றால் என் அப்பாவுக்கு துரோகம் இழைப்பது போன்றது. தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் என்னைத் தம்பியாக எல்லாவற்றுக்கும் அழைக்கின்றனர். என் அப்பாவின் ரசிகர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன்.
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளில் யாரை பிரதான எதிரியாகக் கருதுகிறீர்கள்?
இந்தத் தேர்தல் அதிமுகவுக்கு எதிரானது. பிரச்சார வியூகத்தைத் தலைமை கட்டமைக்கும்.
திமுக வெற்றி பெற்றால் என்ன நினைப்பீர்கள்?
சந்தோஷம். பத்து ஆண்டுகள் எங்களால் ஆட்சியில் இல்லை. இப்போது எங்களால் ஆட்சிக்கு வரட்டும்.
இவ்வாறு விஜய பிரபாகரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT