Published : 09 Mar 2021 03:59 PM
Last Updated : 09 Mar 2021 03:59 PM
புதுச்சேரியில் கூட்டணிக்குத் தலைமை, கூடுதல் தொகுதிகளை காங்கிரஸிடம் திமுக கோரியுள்ளதால் தொகுதிப் பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டுக் கட்சித் தலைமைக்கு இரு தரப்பினரும் தெரிவித்து விட்டனர். இதனால், சென்னையில் ஸ்டாலின் முன்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி இழுபறியில் உள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2016-ல் காங்கிரஸ் - திமுக கூட்டணி வென்று ஆட்சியமைத்தது. திமுக இரு இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. அவர்கள் இருவருக்கும் வாரியத் தலைவர் பதவி மட்டும் தரப்பட்டது. அதைத் தொடர்ந்து, நடந்த இடைத்தேர்தலில் திமுக வென்று அதன் எண்ணிக்கை 3 ஆனது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்தார். அதனால் மாநில அமைப்பாளர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். இச்சூழலில், துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும், முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் காரணமாக நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டதை திமுக கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியது.
கூட்டணிக் கட்சியான திமுக, காங்கிரஸ் அரசின் அமைச்சர்களையும் கடுமையாகப் பேசத் தொடங்கியது. இதனால் கூட்டணியில் விரிசல் விழத் தொடங்கியது. மாநில அமைப்பாளர்கள் மூவரும் ஒன்றுசேர்ந்து நேரடியாக திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து புதுச்சேரி நிலவரத்தை எடுத்துரைத்தனர். கட்சியை வளர்க்க தனித்துப் போட்டியிடலாம் என்று முதலில் கூறினர். ஜெகத்ரட்சகனும் புதுச்சேரி அரசியல் களத்துக்கு வந்தார். அதற்கான பணிகளைத் தொடங்கி, காங்கிரஸ் கூட்டங்கள், போராட்டங்களில் பங்கேற்பதை திமுகவினர் தவிர்க்கத் தொடங்கினர்.
இச்சூழலில், புதுவை மாநில காங்கிரஸில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏக்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார் அடுத்தடுத்து விலகி பாஜகவில் இணைந்தனர்.
முன்னாள் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், லட்சுமி நாராயணன் ஆகியோரும் பதவி விலகி என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தனர். திமுகவில் இருந்து வெங்கடேசனும் விலகி பாஜகவில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது.
தற்போது மீண்டும் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உருவானது. அதில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. ஆனால், வழக்கமாக கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்கும். ஆனால், இம்முறை கூட்டணிக்குத் தலைமையை தாங்கள் ஏற்பதாக திமுக தெரிவித்தது. இது காங்கிரஸை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதுபற்றி, திமுக - காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, "காங்கிரஸிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் விலகிவிட்டனர். அதைக் காரணம் காட்டி, திமுக கூடுதல் தொகுதிகளை கோரியுள்ளது. அதற்கான பட்டியலையும் தந்துள்ளது. காங்கிரஸ் கட்சி வென்ற தொகுதிகளையும் திமுக கோரியுள்ளது. அத்துடன், திமுகதான் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும், முதல்வர் உள்ளிட்ட பதவிகளையும் கோரியுள்ளதால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்தது.
இரு கட்டமாகப் பேச்சுவார்த்தை நடந்தும் முடிவுக்கு வராததால் கட்சித் தலைமைக்கு இரு கட்சிகளும் தெரிவித்துவிட்டன. அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்பாகப் பேச்சுவார்த்தை நடந்து விரைவில் முடிவு வரும்" என்று தெரிவித்தனர்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் உள்ளன. எனினும், 18 இடங்களை திமுகவும், 12 இடங்களை காங்கிரஸும் பெற்றுக்கொள்வதுடன், காங்கிரஸே சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கவும் வலியுறுத்துவதும் இழுபறிக்கு முக்கியக் காரணம் என்றும் இக்கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT