Published : 09 Mar 2021 03:07 PM
Last Updated : 09 Mar 2021 03:07 PM

திருமாவளவனின் கட்சிக்கு தேர்தலில் இறுதித் தீர்ப்பு; மதிமுகவைத் திமுகவுடன் இணைத்துவிடலாம்: அண்ணாமலை பேட்டி

சென்னை

இந்த முறை தேர்தலில் திருமாவளவனின் கட்சிக்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும் என்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சிக்கு அண்ணாமலை அளித்த பேட்டி:

தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டு வருவதாக விமர்சனம் வைக்கப்படுகிறதே?

தமிழர்களுக்கு எதிரான எந்தவொரு திட்டத்தையும் பாஜக கொண்டு வரவில்லை. முதன்முதலாக வேளாண் சட்டத்தை ஆதரித்து மேடை மேடையாகப் பிரச்சாரம் செய்தவர் ஈபிஎஸ். தமிழ்நாட்டில் உள்ள நிஜ விவசாயிகள் இதை எதிர்க்கவில்லை. எந்தப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை. பஞ்சாப், ஹரியாணாவில் உள்ள சில விவசாயிகள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழத்தில் பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு திமுகவினர் சிலர் மட்டுமே போராடினர்.

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு தேர்தலில் எதிரொலிக்குமா?

பெட்ரோல், டீசல், காஸ் விலையை வேகமாகக் குறைக்க வேண்டும் என்று அகில இந்தியத் தலைமைக்கும், அரசுக்கும் வலியுறுத்தி இருக்கிறோம்.

தேர்தலுக்காக விலையைக் குறைக்கிறீர்களா?

தேர்தலை வைத்து அரசியல் செய்யும் கட்சி பாஜக கிடையாது. இதை மக்களுடைய குறையாகப் பார்க்கிறோம். விரைவில் நிச்சயமாக, நல்ல முடிவு வரும்.

பாஜகவை எதிர்க்க திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சமரசம் செய்து கொள்வதாகத் தெரிவித்துள்ளன. பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டுமென திருமா கூறியுள்ளார். இந்தத் தேர்தல் உண்மையிலேயே சவாலானதாக இருக்குமா?

இந்த முறை திருமாவளவனின் கட்சிக்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும். அதை மக்களே முடிவு செய்துவிட்டார்கள். ஏனெனில் அவர் இந்துக்களின் எதிரி; எல்லா மக்களுக்கும் எதிரி. அவரின் கட்சிக் கொள்கை என்னவென்று யாருக்குமே தெரியாது. எதற்கு நீங்கள் கட்சி நடத்துகிறீர்கள்? வைகோவுக்கும் இதே கேள்வியை முன்வைக்கிறேன்.

திமுகவில் இருந்து பிரிந்துவந்த நீங்கள் திமுக சின்னத்தில் போட்டியிட உள்ளீர்கள் என்றால் நீங்கள் மீண்டும் கட்சியை திமுகவுடன் இணைத்துவிடலாம். திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு உண்மையில் எந்தக் கொள்கையுமே கிடையாது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உண்மையான கட்சி பாஜக. 2016-ம் ஆண்டைப் பார்க்காதீர்கள். கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக அசுரத்தனமான வளர்ச்சி அடைந்துள்ளது. அது இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். அதிமுக கூட்டணி வெல்லும்.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x