Published : 09 Mar 2021 02:18 PM
Last Updated : 09 Mar 2021 02:18 PM

பாஜக 20 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது ஏன்? அதிமுக தொண்டர்கள் பாஜகவுக்காகக் களத்தில் இறங்கி வேலை செய்வார்களா?- அண்ணாமலை பேட்டி

கொள்கை ரீதியாக அதிமுக எங்களின் இயல்பான கூட்டணி என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சிக்கு அண்ணாமலை அளித்த பேட்டி:

''முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, பாஜக மாநிலத் துணைத் தலைவர், பாஜக வேட்பாளர்.. உங்களை எப்படி அறிமுகப்படுத்த வேண்டும்?

பாஜகவின் தொண்டன் என்று அறிமுகப்படுத்தப்படவே விரும்புகிறேன். கட்சித் தலைமை விரும்பினால் தேர்தலில் போட்டியிடுவேன். ஓரிரு நாட்களில் இதுகுறித்து அறிவிப்பு வரும்.

அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது ஏன்?

அதிமுக, திமுக இரண்டும்தான் முக்கியக் கட்சிகள். அவற்றின் தலைமையில் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடும்போது, அதிக தொகுதிகள் கேட்கலாம். ஆனால் அதிமுக, திமுக கட்சிகள் அதிக தொகுதிகளில் தனித்துப் போட்டியிட விரும்புகின்றன.

அதிக தொகுதிகள் என்பதைவிடத் தொகுதிகளில் வெற்றி என்பதுதான் முக்கியம். 65 தொகுதிகளில் எங்களின் பலத்தை நிர்ணயம் செய்திருக்கிறோம். ஆனாலும், இந்தத் தேர்தலில் அவ்வளவு இடங்களைக் கேட்பது சரியாக இருக்காது. திமுக திரும்ப வரக்கூடாது என்ற நோக்கத்தில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

நாம் அதிமுகவுக்குப் பலமாக இருக்க வேண்டும். ஈபிஎஸ்ஸை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அகில இந்தியத் தலைமையின் எண்ணம். அதற்காகத்தான் குறைவான தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம்.

தமிழகத்தில் ஆட்சி அமைந்தால் பாஜக கலைத்துவிடும் என்பதற்காகத்தான் கட்சிகள் அதிக தொகுதிகளில் தனித்துப் போட்டியிட விருப்பம் காட்டுகின்றனவா?

பிஹார் தேர்தலையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். கூட்டணியைப் பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதியை பாஜக மீறாது. பாஜகவின் அனைத்து வாக்குகளையும் அதிமுகவுக்குக் கொடுக்கிறோம்.

அதிமுக தொண்டர்கள் பாஜகவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா? பாஜகவுக்காகக் களத்தில் இறங்கி வேலை செய்வார்களா?

நிச்சயமாக. 2019-ல் தேர்தல் கூட்டணி அமைத்தோம். அதிமுக தொண்டர்கள் எங்களை வெளியில் இருந்து வந்தவர்களாகப் பார்க்கவில்லை. இயற்கையாகவே இயல்பாக அமைந்த கூட்டணியாகத்தான் அவர்கள் பார்க்கின்றனர். ஆட்சியில் இருக்கும் அதிமுகவுக்கு 4 ஆண்டுகளாகக் கூட்டணிக் கட்சியாக உடன் நின்றிருக்கிறோம்.

கொள்கை ரீதியாக இரு கட்சிகளுமே தேசியத்திலும் ஆன்மிகத்திலும் இருக்கிறோம். பிற கூட்டணிக் கட்சிகள் சொல்வதற்கு முன்னாலேயே, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் என்று சொன்னது பாஜக.

ஆனால், முதல்வர் வேட்பாளரை பாஜக தேசியத் தலைமைதான் அறிவிக்கும் என்று நீங்களே சொன்னீர்களே?

அதாவது பாஜக தேசியத் தலைமைதான் அறிவிக்கும் என்று சொல்லி இருந்தாலும் நாங்கள்தான் தலைமையிடம் பேசி, பிற கூட்டணிக் கட்சிகள் சொல்வதற்கு முன்னால் தலைமையை அறிவிக்க வைத்தோம். ஒருங்கிணைந்த சக்தியாக ஈபிஎஸ்ஸை முன்னிறுத்தியுள்ளோம். இக்கூட்டணி தேர்தலில் நிச்சயம் வெல்லும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார்''.

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x