Published : 09 Mar 2021 12:39 PM
Last Updated : 09 Mar 2021 12:39 PM

எண்ணிக்கை வருத்தங்கள் எல்லோருக்கும் உண்டு: ஜோதிமணி

சென்னை

காங்கிரஸ் கட்சிக்குக் குறைந்த அளவிலான தொகுதிகள் ஒதுக்கீடு செய்திருப்பது தொடர்பான வருத்தங்கள் உண்டு என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சூடுபிடித்தது. அதில் திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஆன தொகுதிப் பங்கீடு பெரும் விவாதத்தை உண்டாக்கியது. காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை திமுக ஒதுக்கத் தயாராக இல்லை.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செயல்வீரர்கள் கூட்டத்தில் கண்கலங்கினார் என்ற செய்தி வெளியானது. ஏனென்றால் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டது காங்கிரஸ். ஆனால், இந்த முறை அவ்வளவு தொகுதிகள் தரமுடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது திமுக.

பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின் இறுதியாக 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. குறைவான தொகுதிகளாக இருந்தாலும் பாஜகவை வீழ்த்துவதே எங்கள் குறிக்கோள் என்று காங்கிரஸ் கட்சியினர் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்குக் குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டது தொடர்பாக, அக்கட்சியின் எம்.பி. ஜோதிமணி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"எண்ணிக்கை குறித்த வருத்தங்கள் எல்லோருக்கும் உண்டு. இப்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு முக்கியம் முறையாக, கூட்டாக, வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைப் பெறுவது. வெற்றி வாய்ப்பு, தகுதி, கட்சி விசுவாசம் மிகுந்த வேட்பாளர்களை நிறுத்துவது. தமிழக விரோத பிஜேபி, அதிமுகவை வெல்வது".

இவ்வாறு ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார்.

— Jothimani (@jothims) March 8, 2021

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x