Published : 09 Mar 2021 12:24 PM
Last Updated : 09 Mar 2021 12:24 PM

திமுக கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் நாளை முடிவாகும்: சுப்பராயன் எம்.பி. பேட்டி

திமுக கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் குறித்து நாளை முடிவாகும் என்று மக்களவை உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள, எம்.பி. சுப்பராயன் தலைமையிலான 3 பேர் அடங்கிய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவினர், அண்ணா அறிவாலயத்தில், திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுப்பராயன், ''இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதிப் பங்கீட்டுக் குழு, திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் ஆலோசனை நடத்தியது. இதில் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டு, அறிவிக்கப்பட்ட 6 தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. இதில் ஆக்கபூர்வமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாளை காலைக்குள் இதுகுறித்த விவரம் வெளியாகும்.

எந்தெந்தத் தொகுதிகள் என்று தற்போது கூற வாய்ப்பில்லை. உத்தேசமாகத் தொகுதிகளை வெளியிடும் முறை தவறானது. இறுதிப்படுத்தப்பட்ட பட்டியல், இறுதிப்படுத்தப்படாத பட்டியல் என்பது பத்திரிகையாளர்களுடன் விவாதிக்கும் விஷயமில்லை'' என்று சுப்பராயன் எம்.பி. தெரிவித்தார்.

திருத்துறைப்பூண்டி தொகுதி, பவானி சாகர் தொகுதி, கிருஷ்ணகிரியில் தளி தொகுதி, திருப்பூரில் ஒரு தொகுதி, வால்பாறை தொகுதி, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி, விருதுநகரில் ஒரு தொகுதி, சிவகங்கை உள்ளிட்டவற்றில் 6 தொகுதிகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x