Published : 09 Mar 2021 12:06 PM
Last Updated : 09 Mar 2021 12:06 PM
திருச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் திமுகவின் பிரம்மாண்ட தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் மார்ச் 7-ம் தேதி திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
அதில், "மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு முற்றிலுமாக ஒழிக்கப்படும். முழுவதும் தொழில்நுட்ப இயந்திரங்களே இனி இப்பணிக்காகப் பயன்படுத்தப்படும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார். இந்த முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது எனவும் சாடியுள்ளார்.
இது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முழுவதுமாக ஒழிக்க அம்மா அரசு அதற்கான நவீனத் திட்டத்தையும் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு பல்வேறு கட்டங்களாகத் தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வந்துள்ளது.
தங்களது ஆட்சிக் காலத்தில் செய்த அராஜகச் செயல்களால் மக்கள் செல்வாக்கை முழுவதுமாக இழந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களையே தாம் ஆட்சிக்கு வந்ததும் செய்வேன் எனத் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டும் எனக் கண்கொத்தி பாம்பாய் அலைந்து கொண்டிருக்கும் அவர், அதிமுக ஆட்சியில் செய்த மக்கள் நலத்திட்டங்களைக் கூடத் தெரிந்து கொள்ளவில்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
மக்களைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் முதல்வர் பதவியை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு பதவி வெறி பிடித்து இருக்கும் அவருக்கு இம்முறையும் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்".
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தங்களது ஆட்சிக் காலத்தில் செய்த அராஜக செயல்களால் மக்கள் செல்வாக்கை முழுவதுமாக இழந்த திமுக தலைவர் @mkstalin அதிமுக ஆட்சியில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களையே தாம் ஆட்சிக்கு வந்ததும் செய்வேன் என திரும்ப திரும்ப கூறி வருகிறார். pic.twitter.com/t7a7AGWJ3P
— SP Velumani (@SPVelumanicbe) March 8, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT