

உலகின் தலைசிறந்த 20 பெண்களுக்கான விருதை, தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுள்ளார். அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற விருது நிகழ்வில் தமிழிசை காணொலி மூலம் புதுச்சேரியில் இருந்து கலந்துகொண்டார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் செயல்பட்டு வரும் பல்வேறு இன நடவடிக்கைக் குழு என்ற அமைப்பு சார்பில், உலகின் தலைசிறந்த 20 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்களை ஏற்படுத்திய பல்வேறு துறை சார்ந்த பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
2020-ம் ஆண்டுக்கான இந்த விருது தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் உரிமை, பாலினச் சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றைத் தமிழிசை மேற்கொண்டுள்ளதாகவும், மருத்துவராகப் பணியைத் தொடங்கி, பாஜகவில் பல்வேறு பொறுப்புகள் வகித்து, தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகத் தமிழிசை உயர்ந்ததாகவும் விருதுக் குழுவினர் பாராட்டியுள்ளனர்.
9-வது ஆண்டாக இந்த முறை இல்லினாய்ஸில் நடைபெற்ற நிகழ்வில் அமெரிக்க எம்.பி. டேனி கே.டேவிஸ் விருதுகளை வழங்கினார். அமெரிக்காவில் நேற்று (மார்ச் 8) நடைபெற்ற விருது நிகழ்வில் தமிழிசை காணொலி மூலம் புதுச்சேரியில் இருந்து கலந்துகொண்டார். இதே விருதை அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் இணைந்து தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுள்ளார்.