Published : 09 Mar 2021 11:05 AM
Last Updated : 09 Mar 2021 11:05 AM

நீட் முதுநிலைத் தேர்வு; ஒவ்வொரு தேர்வருக்கும் அவர் தம் மாநில மையமே கிடைப்பதை உறுதி செய்க: சு.வெங்கடேசன் எம்.பி. மீண்டும் கடிதம்

சு.வெங்கடேசன் எம்.பி: கோப்புப்படம்

புதுடெல்லி

நீட் முதுநிலைத் தேர்வில் ஒவ்வொரு தேர்வருக்கும் அவர் தம் மாநில மையமே கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

நீட் முதுநிலைப் பட்ட தேர்வு மையப் பிரச்சினையில் நிலவும் நிச்சயமற்ற நிலைக்கு முடிவு கட்டி தமிழகம் மற்றும் புதுவை மாணவர்களுக்கு நல்லதொரு சூழலை உருவாக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தேசிய தேர்வுக் கழகத்திடம் (என்.டி.ஏ) வலியுறுத்தியிருந்தார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் பிப்ரவரி 24 அன்று எழுதிய கடிதத்திற்கு தேசிய தேர்வுக் கழக நிர்வாக இயக்குநர் பவானிந்திரா லால் மார்ச் 3 அன்று பதில் அளித்தார்.

அதில், நீட் முதுநிலைப் பட்டம் - 2021 தகவல் பகிர்வேடு பிரிவுகள் 7.5 மற்றும் 8.18 இல், தேர்வர் விரும்புகிற மாநில மையம் கிடைக்காத பட்சத்தில் தேர்வு மையப் பட்டியலில் மற்றவை என்று உள்ள வேறு மாநிலம்/யூனியன் பிரதேசத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். தேசிய தேர்வுக் கழக அஞ்சல் முகவரி உள்ள மாநிலத்தில் மையத்தை ஒதுக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுமென்றும், அது முடியாத பட்சத்தில் அருகில் உள்ள மாநிலங்களின் மையங்களை ஒதுக்குமென்றும் தெரிவித்துள்ளார். கட்டமைப்பு, நிர்வாக வசதிகளைக் காரணம் காட்டியுள்ள அவர், கோவிட் சூழலில் தனி மனித விலகலுக்காக அடுத்த இருக்கைகளைக் காலியாக விட்டுவிட்டு தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக, மீண்டும் சு.வெங்கடேசன் நேற்று (மார்ச் 8) எழுதியுள்ள கடிதத்தில், "கோவிட் சூழலில் தனிமனித விலகலைக் கடைப்பிடிக்கவும், இடர் அற்ற சூழலைத் தேர்வர்களுக்குத் தர முனையும் உங்கள் அக்கறையைப் பாராட்டுகிறேன். என்றாலும், அந்தந்த மாநில மையங்களே அந்தந்த மாநிலம் சார்ந்த மாணவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய கூடுதல் மையங்களுக்கான முயற்சிகளை தன்னூக்கத்தோடு ஏன் எடுக்கவில்லை? என்பது புரியவில்லை.

மற்ற மாநிலங்களுக்குப் பயணம் செய்வதும் தேர்வர்களுக்கு இடரை உருவாக்குமென்பதை தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அதுவும் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் இறுக்கமாக்கப்பட்டு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ - பாஸ் மீண்டும் வலியுறுத்தப்படும் நிலையில் எப்படி இப்பயணங்கள் எளிதாக அமையும்?

நான் இக்கடிதத்தை சர்வதேச மகளிர் தினம் அன்று எழுதுகிறேன். அண்டை மாநில மையங்களில் தேர்வு எழுதப் பயணிப்பது என்பது பெண்களையே அதிகம் பாதிக்கும். பெண்களோடு உடன் செல்ல வேண்டிய நிலையில் உள்ள மூத்தவர்கள் நமது அக்கறைக்கும், அனுதாபத்திற்கும் உரியவர்களல்லவா!

உங்கள் கடிதத்தில் கொஞ்சம் நம்பிக்கை தந்துள்ளீர்கள். முடிந்த வரை தமிழகம், புதுச்சேரி தேர்வர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே மையங்களை ஒதுக்க முயற்சி செய்வோமென்று கூறியுள்ளீர்கள். ஆகவே, அதற்குரிய கட்டமைப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒவ்வொரு தேர்வருக்கும் அவர் தம் மாநில மையமே கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுகிறேன்" என்று தேசிய தேர்வுக் கழக நிர்வாக இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x