Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM

வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது முகக்கவசம் அணியாமல் வந்தால் வேட்பாளர்களுக்கு அபராதம்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

கோப்புப்படம்

ஈரோடு

வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளர்கள் மற்றும் உடன் வருபவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வரவேண்டும், இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும், என ஈரோடு ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கி.கதிரவன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 4,779 வாக்குப்பதிவு இயந்திரம், 3,746 கட்டுப்பாட்டு கருவிகள், 4,088 விவிபேட் இயந்திரங்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 613 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இப்பணியை ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சி.கதிரவன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் சுமூகமான முறையில் நடைபெறும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 951 இடங்களில் 2741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 80 வயதுக்கு மேல் 50 ஆயிரத்து 62 பேர், மாற்றுத்திறனாளிகள் 14 ஆயிரத்து 98 பேர் உள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று 12-டி படிவம் வழங்கும் பணி நடந்து வருகிறது.

வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வரும்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி வேட்பாளர்கள் மற்றும் உடன் வருபவர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வரவேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும். சமூக இடை வெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x