Published : 08 Mar 2021 06:45 PM
Last Updated : 08 Mar 2021 06:45 PM
கரோனா பரவலைத் தடுக்க, வாக்குச்சாவடிக்கு வரும் ஒவ்வொரு வாக்காளருக்கும், பிரத்யேகமாக கையுறை விநியோகிக்கப்படும் என, கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடக்க உள்ளது. கரோனா பரவல் அச்சம் காரணமாக, கடந்த தேர்தல்களைவிட, நடப்புத் தேர்தலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு வழக்கமான நேரத்தை விட, கூடுதலாக ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளில் கூட்டத்தைத் தவிர்க்க, ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், விருப்பம் இருந்தால் வீடுகளில் இருந்தே தபால் மூலம் தங்களது வாக்குகளைச் செலுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சிங்காநல்லூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், சூலூர், மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், வால்பாறை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய பத்து தொகுதிகள் உள்ளன.
கடந்த ஜனவரி மாதம், மாவட்ட நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், கோவையில் 10 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 15 லட்சத்து 9,531 ஆண் வாக்காளர்கள், 15 லட்சத்து 52 ஆயிரத்து 799 பெண் வாக்காளர்கள், 414 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 4,427 வாக்குச்சாவடிகள் உள்ளன. கரோனா பரவல் அச்சம் காரணமாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், வாக்குச்சாவடிகளில் பல்வேறு நடவடிக்கைகள், மாவட்ட நிர்வாகத்தினரால் பின்பற்றப்பட உள்ளன.
இது தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறும்போது, "கரோனா பரவல் அச்சம் காரணமாக, வாக்குப்பதிவு தினத்தன்று, வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி நிலைய அலுவலர் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பு பாதுகாப்புக் கவச உடை எனப்படும் 'பிபிஇ கிட்' வழங்கப்படும்.
வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கையுறை விநியோகிக்கப்படும். அதற்கு முன்பு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பத்திறன் பரிசோதிக்கப்படும். பின்னர், கிருமிநாசினி மருந்தைக் கையில் தெளித்து சுத்தப்படுத்திக் கொண்டு, அதன் பின்னர் கையுறையை அணிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னரே, வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவர்.
வாக்களித்த பின்னர், வாக்காளர்கள் வெளியே வந்து, அங்கு வைக்கப்பட்டுள்ள தொட்டியில் கையுறையை போட்டுச் சென்று விடலாம். வாக்களிக்க வரும் வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பிரத்யேகமாக தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்தல், கிருமிநாசினி விநியோகித்தல், வாக்குச்சாவடிக்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க உதவுதல் போன்ற பணிகளை மேற்கொள்வர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT