Published : 08 Mar 2021 05:31 PM
Last Updated : 08 Mar 2021 05:31 PM
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான குற்ற வழக்கையும், திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீதான அவதூறு வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஸ்டாலின் மீதான வழக்கு
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்தும், அரசு மற்றும் காவல்துறை செயல்பாடுகள் குறித்தும் உண்மைக்குப் புறம்பாகக் கூறியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசின் சார்பில் தொடர்ந்த 5 அவதூறு வழக்குகள் நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அவற்றில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா இல்ல விழாவில் பேசியது தொடர்பான அவதூறு வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். மற்ற நான்கு வழக்குகளின் விசாரணைக்குத் தடை விதித்து, விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
அன்புமணி மீதான வழக்கு
வன்முறையைத் தூண்டும் விதமாகவும், கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பேசியதாக பாமக இளைஞரணித் தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் மீது பிரம்மதேசம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அன்புமணி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அன்புமணியின் பேச்சு குறித்து காவல்துறை வழக்குப் பதிந்துள்ளதாகவும், அதை ஆராய்ந்து நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டுமென்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அன்புமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
டிடிவி தினகரன் மீதான வழக்கு
தமிழக அமைச்சர்களை விமர்சித்த விவகாரத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு அமைச்சர்கள் மீதான கருத்து பொதுப்படையாகத்தான் உள்ளதே தவிர, அரசுப் பணிகளைச் செய்வதற்கு இடையூறாக இல்லை எனக் கூறி, தினகரனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்குகளின் விசாரணையின்போது, அன்புமணி ராமதாஸ் தரப்பில் வழக்கறிஞர் ஜோதிமணியன், டிடிவி தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மு.க.ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குமரேசன் ஆகியோரும், அரசு மற்றும் காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT