Published : 08 Mar 2021 03:58 PM
Last Updated : 08 Mar 2021 03:58 PM

பாஜகவைத் தமிழகத்துக்குள் நுழையவிடாமல் தடுக்கவே திமுக கூட்டணி உருவானது: பொன்முடி பேட்டி

பாஜகவைத் தமிழகத்துக்கு உள்ளே நுழையவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் உருவானதுதான் திமுக கூட்டணி என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 25, விசிக 6, இந்தியக் கம்யூனிஸ்ட் 6, மார்க்சிஸ்ட் 6, ஐயூஎம்எல் 3, மமக 1 என 47 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. மதிமுக 6, மமக 1, சிறிய கட்சிகள் ஆகியவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் திமுகவுக்கு 187 இடங்களில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் திமுக கூட்டணித் தொகுதிப் பங்கீட்டில் கறார் காட்டியதாகவும், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்பட்டது பற்றியும் திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சிக்கு பொன்முடி அளித்த பேட்டி:

''தொகுதிப் பங்கீடுகள் சுமுகமாகத்தான் நடந்திருக்கிறதா?

தோழமைக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை விவரமாகப் பேசி, அவர்களின் ஒப்புதலோடு முடித்ததை அனைவரும் அறிவர். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்று எதிர்க் கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் நினைக்கிறார்கள். எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒரு தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். கூட்டணிப் பேச்சுவார்த்தை என்பது இப்படித்தான் இருக்கும். எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையில், ஸ்டாலின் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தாமதம், பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தது ஏன்?

ஒவ்வொரு கட்சியிலும் ஒரு குழு நியமிக்கப்படும். அக்குழு பேச்சுவார்த்தை நடத்தித் தலைவர்களிடம் ஒப்புதல் பெறும். இது காலம் காலமாக நடைபெறுகிற ஒன்றுதான். இதில் எவ்விதத் தாமதமும் இல்லை. முடிய வேண்டிய நேரத்தில் மிகத் தெளிவாகப் பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது.

பாஜகவின் வியூகங்களை எதிர்கொள்ள திமுக அதிக இடங்களில் போட்டியிட்டு, அறுதிப் பெரும்பான்மையைப் பெற வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பாஜகவைத் தமிழகத்துக்கு உள்ளே நுழையவிடக் கூடாது என்ற எண்ணம் திமுகவுக்கு மட்டுமல்ல, எங்களுடன் பயணிக்கும் அனைத்துத் தோழமைக் கட்சிகளுக்கும் இருக்கிறது. அந்த எண்ணத்தின் அடிப்படையில் உருவானதுதான் இந்தக் கூட்டணி.

முதலில் எங்களின் எதிரி பாஜக மற்றும் அதன் காலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் அதிமுக. இவர்கள் ஒருங்கிணைந்திருப்பதைப் பார்க்கும்போது எங்களின் வெற்றி உறுதியாகி உள்ளது. திருச்சி மாநாட்டில் ஸ்டாலினின் அறிவிப்பு மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது''.

இவ்வாறு பொன்முடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x