Published : 08 Mar 2021 03:30 PM
Last Updated : 08 Mar 2021 03:30 PM
புதுச்சேரியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு நாளைக்குள் முடிவாகி, விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி. வைத்திலிங்கம், காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, திமுக சார்பில் மாநில அமைப்பாளர்கள் சிவா எம்எல்ஏ, சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். காங்கிரஸ் - திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமார் 15 நிமிடம் நடந்தது.
பேச்சுவார்த்தைக்குப் பின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை 2-ம் கட்டமாக இன்று நடந்தது. பேச்சுவார்த்தையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் எனக் கேட்டதைப் பேச்சுவார்த்தையில் தெரிவித்தனர். எங்கள் தலைமையில் புதுவை திமுகவினர் கூறிய விஷயத்தைத் தெரிவிக்க உள்ளோம். மேலும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் தினேஷ் குண்டுராவ், இன்று மாலை சென்னைக்கு வருகிறார். அவர் திமுக தலைவரைச் சென்னையில் சந்தித்துப் பேசுகிறார்.
அதற்கு முன்பாக திமுகவினர் எத்தனை தொகுதிகள் கேட்கின்றனர் என்ற சாராம்சத்தைத் தெரிவிக்கிறோம். இன்று மாலையோ, நாளையோ தொகுதிப் பங்கீடு முடிவடையும்" என்று நாராயணசாமி குறிப்பிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
காங்கிரஸாரை மிரட்டி பாஜகவுக்கு அழைப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தீர்கள். தற்போது சிலர் என்ஆர்.காங்கிரஸுக்குச் செல்கிறார்களே?
'ஒரு சிலர் மிரட்டல் காரணமாகப் பாஜகவுக்குச் சென்றுள்ளனர். நிர்பந்தம் காரணமாக ஒரு சிலர் என்.ஆர்.காங்கிரஸுக்குச் சென்றுள்ளனர். யார் யார் எதற்குச் சென்றுள்ளார்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். காங்கிரஸிலிருந்து வெளியேறியவர்கள் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள். காங்கிரஸ் கூட்டங்களில் பங்கேற்றவர்கள். பல பதவிகளையும் காங்கிரஸ் அவர்களுக்கு வழங்கியது. ஆனாலும், அதைப் புறந்தள்ளி அவர்கள் வெளியேறியுள்ளனர்.
கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் எத்தனை தொகுதிகள் கேட்கின்றன?
கூட்டணிக் கட்சிகள் கேட்டுள்ள எண்ணிக்கை விவரத்தையும் கட்சித் தலைமைக்குத் தெரிவித்துள்ளோம்.
தொகுதிப் பங்கீடு விவரங்கள் எப்போது தெரியவரும்?
இன்று மாலை அல்லது நாளை முடிவாகிவிடும்.
உங்கள் கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பார்?
அதுகுறித்தும் பேசி வருகிறோம்''.
இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
கூட்டத்தில் நடந்தது தொடர்பாக இரு கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, "கூட்டத்தில் திமுக 15 தொகுதிகளைக் கேட்டுள்ளது. மீதியுள்ள 15 தொகுதிகளில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக கட்சிகள் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதில் இரு தரப்பும் கருத்துகளைத் தெரிவித்தன. அதைத் தொடர்ந்து இது தொடர்பான விவரங்களை இரு கட்சிகளும் எங்கள் கட்சித் தலைமைக்குத் தெரிவித்துள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT