Published : 08 Mar 2021 12:37 PM
Last Updated : 08 Mar 2021 12:37 PM
கூடுதல் தொகுதிகள் கேட்டோம். ஆனால், திமுக 6 தொகுதிகள் மட்டுமே அளிக்க முன்வந்தது. எங்கள் நோக்கம் அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்துவதே என்பதால் திமுக கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்பதற்காக 6 தொகுதிகளை ஒப்புக்கொண்டோம் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதற்குப் பின்னர் அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் பாஜக-அதிமுக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்கிற கோட்பாடு நிறைவேறிவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதேநேரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் அதிக பலத்தோடு சட்டப்பேரவையில் இடம்பெற வேண்டும் என்கிற எண்ணத்தோடு பேச்சுவார்த்தையைத் தொடங்கினோம்.
பாஜகவையும், அதிமுகவையும் முறியடிப்பது எந்த அளவுக்கு அவசியமோ, அதே அளவுக்கு அதிக எண்ணிக்கையில் நாங்கள் சட்டப்பேரவையில் இடம்பெற வேண்டும் என்பதும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல் அவசியம் என்கிற அடிப்படையில் தொடர்ந்து முயன்றோம். இறுதியாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 6 தொகுதிகள் என்பது உறுதியானது.
எங்களைப் பொறுத்தவரையில் கடந்த பல பொதுத் தேர்தல்களில் கூடுதலான இடங்களில் போட்டியிட்டதன் அடிப்படையில் 6 தொகுதிகள் என்பது சற்று குறைவான ஒன்று என்றாலும், கூடுதலாக இடம் திமுக ஒதுக்கும் என எதிர்பார்த்தோம். அதே சமயம் இன்றைக்கு அதிமுக-பாஜக கூட்டணியை முறியடிக்கும் அவசியம் இருக்கும் இந்தச் சூழ்நிலையில் எந்த ஒரு சிறு இடையூறும், பிரச்சினையும் இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுவிடக் கூடாது.
அதிமுக-பாஜக வெற்றிபெற சிறு வாய்ப்பும் அளித்துவிடக் கூடாது என்கிற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக நின்று, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது.
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றுவிடக்கூடாது, திமுக கூட்டணி வெற்றிபெற்று மாற்று ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக 6 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவெடுத்து அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளோம். நேற்று நடந்த மாநிலக் குழுக் கூட்டத்திலும் இதே முடிவை உணர்ந்து எடுத்தோம்.
234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெற நாங்கள் பாடுபடுவோம்”.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பதிலளித்தார்.
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
ராஜ்யசபா தொகுதி கேட்டீர்களா?
இல்லை. அது அந்த நேரம் வரும்போது பேசுவோம்.
அதிக தொகுதிகள் கேட்டீர்கள். என்ன காரணங்களுக்காக ஒப்புக்கொண்டீர்கள்?
நாங்கள் அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் என்கிற அடிப்படையில் கோரிக்கை வைத்தோம். ஆனால், அதிமுக -பாஜக கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்கிற சூழ்நிலையில் 6 தொகுதிகள் என்பதற்கு ஒப்புக்கொண்டோம். கூட்டணி உறுதியானதில் மகிழ்ச்சி. கேட்ட இடங்கள் கிடைத்திருந்தால் கூடுதல் மகிழ்ச்சி அடைந்திருப்போம்.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT