Published : 08 Mar 2021 11:26 AM
Last Updated : 08 Mar 2021 11:26 AM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுகவுக்கும் நீடித்து வந்த தொகுதி உடன்பாடு இழுபறி முடிவுக்கு வந்தது. இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியதிலிருந்து கடும் இழுபறி நீடித்து வந்தது. திமுக தரப்பில் காங்கிரஸ் தவிர அனைத்துக் கட்சிகளுக்கும் கூறிய பதில் 4 தொகுதிகள். சிலருக்கு 2 தொகுதிகள், காங்கிரஸுக்கு 18 தொகுதிகள். சின்னம் இல்லாமல் தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னத்தில் போட்டியிடும் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அப்போது அனைத்துக் கட்சிகளுக்கும் 6 தொகுதிகள் மட்டுமே. அதற்கு மேல் தரமாட்டோம் என திமுக தரப்பில் உறுதியாக இருந்தனர். முதலில் விசிக 6 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிட ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பின்னர் 6 தொகுதிகளுக்கு உடன்பாடு கண்டது.
மதிமுகவுக்கு தனிச்சின்னம் என்றால் 4 தொகுதிகள். 6 தொகுதிகள் வேண்டுமென்றால் உதயசூரியன் சின்னம் என்ற நிபந்தனை வைக்கப்பட்டது. குறுகிய காலமே பிரச்சாரத்துக்கு உள்ள நிலையில் உதயசூரியனில் போட்டியிட ஒப்புக்கொண்டு 6 தொகுதிகளைப் பெற கையெழுத்திட்டார் வைகோ.
இதில் எஞ்சி நின்ற பெரிய கட்சி காங்கிரஸ் கட்சி. அவர்கள் கேட்ட தொகுதியிலிருந்து இறங்கிவர, திமுக சொன்ன 18 தொகுதியிலிருந்து ஏறிவர 25 தொகுதிகள் உறுதியானது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டது. கூடுதலாக ராஜ்ய சபா எம்.பி. சீட்டு ஒன்று என காங்கிரஸ் வைத்த கோரிக்கையை ஆகட்டும் பார்க்கலாம் என திமுக கூறியதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
இறுதியாக கூட்டணிக்குள் வராமல் இருந்த மார்க்சிஸ்ட் நேற்று மாநிலக் குழுக் கூட்டத்தைக் கூட்டி யதார்த்த நிலையைச் சொல்லி ஒப்புதல் வாங்கியது. அதன் அடிப்படையில் 6 தொகுதிகளில் போட்டியிட மார்க்சிஸ்ட் கட்சியும் ஒப்புக்கொள்ள, இன்று காலை 11 மணி அளவில் அறிவாலயம் வந்த கே.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஸ்டாலினுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன் மூலம் திமுக தோழமைக் கட்சிகள் அனைவருக்கும் 6 தொகுதிகள், காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், சிறிய கட்சிகளுக்கு 2 அல்லது 3 என திமுக இறுதி செய்துள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடனும் இன்று உடன்பாடு ஏற்படுகிறது. இதன்மூலம் பலம் வாய்ந்த கூட்டணியாக உதயசூரியன் சின்னத்தில் 180 இடங்களுக்குமேல் திமுக போட்டியிடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT