Published : 08 Mar 2021 11:09 AM
Last Updated : 08 Mar 2021 11:09 AM
நாங்கள் அறிமுகம் செய்த பல திட்டங்களை ஸ்டாலின் காப்பி அடித்து திமுகவின் திட்டமாக அறிவிக்கிறார். நான் ஸ்டாலினுக்கும் வசனம் சொல்லித் தருகிறேன். எங்கள் சீட்டு துண்டுச்சீட்டாக அங்கு செல்கிறது என திமுக தலைவர் அறிவித்த 7 பிரகடனங்களை விமர்சித்து கமல் பேசினார்.
சென்னை மின்ட் தங்கசாலையில் நேற்று இரவு நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கமல் பேசியதாவது:
“தமிழ்நாடு விற்பனைக்கு அல்ல என்று நான் சொல்வது மக்களின் வசனமாக மாறி வருகிறது. உங்களுக்கு வசனம் சொல்லிக் கொடுப்பதில் எனக்குப் பெருமை. ஆனால், ஸ்டாலினுக்கு நாங்கள்தான் வசனங்கள் சொல்லிக் கொடுக்கிறோம் என்ற அடையாளங்கள் தெரிகின்றன. நாமே தீர்வு என்று நான் சொன்னால் அதையே சத்தம் வராமல் ஒன்றிணைவோம் வா என்பார். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்றால் நான் தருகிறேன் 1000 ரூபாய் என்று ஸ்டாலின் சொல்கிறார்.
பெஜிங் பிரகடனம் போல் நல்லது எங்கிருந்தாலும் ஏற்றுக்கொள்வோம். 50 லட்சம் பேருக்கு வேலை என்றோம். அவர் சொல்கிறார். ஆண்டுக்குப் பத்து லட்சம் பேருக்கு வேலை என்கிறார். அதே கணக்குதானே. நாங்கள் செழுமைக்கோடு என்றால் அவர்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் 1 கோடிப் பேரைக் கொண்டு வருகிறோம் என்கிறார்கள். அப்படி என்றால் 50 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?
அந்தக் கோட்டை அழிக்கவே இல்லையே, அதன் மீது கார்பன் பேப்பரை வைத்துப் போட்டுக்கொண்டே இருந்தீர்கள். மாற்றி மாற்றி அடித்தக் கொள்ளை. தண்ணீர் போகாத பைப்புகளை திமுகவினர் நான் சின்னப்பிள்ளையாக இருந்த காலத்திலிருந்தே போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. முதியவர்களைக் கேட்டுப்பாருங்கள். வீராணம் பைப் மழைக்கு ஏழைகள் ஒதுங்கும் இடமாக எந்தத் தண்ணீரையும் வரவைக்காத பைப்பாக இருந்தது.
அங்கிருந்தே தொடங்கியது ஊழல். அதை நாங்கள் புரியாமல் பார்த்தோம். புரிந்தும் பார்த்தோம். இனி விட்டால் நாடே நாசமாகிவிடும் என்பதால் நாங்கள் இறங்கியுள்ளோம். டிஜிட்டல் கிராமங்கள் என்று சொன்னவுடன் பிராட்பேண்ட் என்று அறிவிக்கிறார்கள். ஏழு உறுதிமொழிகள் உட்பட அத்தனையையும் ஸ்டாலின் காப்பி அடிக்கிறார். அப்படியாவது பாஸ் பண்ண வேண்டும் என்கிற அவசரம் வந்துவிட்டது.
இதில் என்னவென்றால் நாங்கள் எழுதி வைத்துள்ள சீட்டைக் கிழித்து கிழித்து அங்கு போய்க்கொண்டு இருக்கிறது துண்டுச்சீட்டாக. ஏன் இப்படி திரும்பத் திரும்ப தாய்மார்களுக்கு ஊதியம் என்று சொல்கிறேன் என்று புரிகிறதா? நாங்கள்தான் அதைக் கண்டுபிடித்தோம் என்று சொல்லிவிடுவார்கள்''.
இவ்வாறு கமல் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT