Published : 08 Mar 2021 03:57 AM
Last Updated : 08 Mar 2021 03:57 AM
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்களை நடத்த 83 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியான அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி குறும்படங்களை ஒளிபரப்பும் பிரச்சார வாகனங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனைத்துப் பணிகளும் நடைபெற்று வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் வாக்குப்பதிவை அதிகரித்திடும் வகையில், அவர்களை அழைத்து வந்து வாக்களிக்க வைத்திடும் வகையில், மூன்று சக்கர வாகனங்கள் அதிகளவில் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் ஒரு வாக்குச்சாவடியில் 1050-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தால், கூடுதலாக வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிக்காக 8 பறக்கும் படை குழுவினரும், கண்காணிப்புக் குழுவினரும் அமைக்கப்பட்டு சோதனையிடும் பணி நடந்து வருகிறது. தேர்தல் நெருங்கும்போது, கூடுதலாகவும் பறக்கும் படை குழுவை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். தேர்தல் விதிமுறைமீறல் தொடர்பாக இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் மூலம் தங்களது பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக 83 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.சைபுதீன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கு.சதீஸ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், தாட்கோ மாவட்ட மேலாளர் ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரியில் 60 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60 இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர், ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்தும் போது கரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை பின்பற்ற வேண்டும். குறிப்பாக 250 பேர் முதல் 5 ஆயிரம் பேர் வரை பங் கேற்கும் வகையிலான பொதுக் கூட்டங்கள் நடத்தவும், பொதுக் கூட்டம் நடைபெற அனுமதிக்கப்பட்ட இடங்கள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப் பட்டுள்ளன. அதன்படி, ஊத்தங்கரை (தனி), பர்கூர் தொகுதிகளில் தலா 12 இடங்கள், கிருஷ்ணகிரி தொகுதியில் 9 இடங்கள், வேப்பனப்பள்ளி, ஓசூர் தொகுதி களில் தலா 10 இடங்கள், தளி தொகுதிகளில் 7 இடங்கள் என மொத்தம் 60 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப் பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 5 ஆயிரம் மக்கள் தொகை பங்கேற்கும் வகையிலான பொதுக்கூட்டம் நடத்த (கிருஷ்ணகிரி நகரில் உள்ள கார்நேசன் மைதானம்) ஒரே இடத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT