Published : 08 Mar 2021 03:57 AM
Last Updated : 08 Mar 2021 03:57 AM

மதுரை நேரு நகரில் 10 நாட்களாக அவலம் பாதாள சாக்கடை அடைத்து தெருவில் ஓடும் கழிவு நீர்: குடிநீரிலும் கலந்ததால் நோய் பரவும் அபாயம்

பாதாள சாக்கடை அடைப்பு காரணமாக தெருவில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர். (வலது) கழிவு நீர் கலந்து வந்த குடிநீரை பாட்டிலில் பிடித்துக் காண்பிக்கும் பெண். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

மதுரை நேரு நகரில் பாதாள சாக்கடை அடைப்பால் கடந்த 10 நாட்களாக கழிவு நீர் தெரு வில் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடிநீரிலும் கழிவு நீர் கலந்ததால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள் ளது.

மதுரை பைபாஸ் சாலை நேரு நகர், திருவள்ளுவர் மெயின் ரோடு, பசும்பொன் நகர், மருதுபாண்டியர் நகர் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் கடந்த 10 நாட்களாக பாதாள சாக்கடை அடைத்து தெருவில் கழிவு நீர் ஓடுகிறது. வீடுகள் முன்பு தெப்பம் போல் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. குடிநீரிலும் கழிவு நீர் கலந்து வருவதால் மக்கள் குடிக்க நீரின்றி திண்டாடுகின்றனர். பொதுமக்கள் ஏற்கெனவே கரோனா தொற்று அச்சத்தில் தவிக்கும் நிலையில், குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் மற்ற தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து நேரு நகரைச் சேர்ந்த சி.சண்முகசுந்தரம் கூறிய தாவது:

கடந்த 10 ஆண்டுகளாக நேரு நகரில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடக்கத்தில் நேரு நகர் கபிலர் தெருவில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பக்கத்தில் உள்ள அகத்தியர் தெரு உள்ளிட்ட மற்ற தெருக்களிலும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பெருக்கெடுத்து தெருவில் செல்கிறது. வீடுகள் முன் கழிவு நீர் தேங்குவதால் வெளியே வர முடியவில்லை. குடிநீர் குழாய்களும் ஆங்காங்கே உடைந்து கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. அதனால், குடிநீரைக் குடிக்கவும், வீட்டு உபயோகத்துக்கும் பயன்படுத்த முடியவில்லை. அதனால், குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

பழங்காநத்தம் உழவர் சந்தை அருகே பாதாள சாக்கடை குழாய் களுக்கு மெயின் ஜங்ஷன் உள்ளது. அதில் அடைப்பு ஏற்பட்டதாலே நேரு நகரில் பாதாள சாக்கடை தெருக்களில் ஓடுவதாகக் கூறப்படுகிறது. மாநகராட்சி நிர் வாகம் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x