Published : 08 Mar 2021 03:58 AM
Last Updated : 08 Mar 2021 03:58 AM
திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் ‘நவிரமலை கல்வெட்டுகள்’ கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி, காணி நிலம் மு.முனிசாமி, தொல்லியல் அறிஞர் பெ.வெங்கடேசன், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி குப்புசாமி, வரலாற்று ஆர்வலர்கள் வேந்தன், வீரப்பன் ஆகியோர் அடங்கிய ஆய்வுக்குழுவினர் கடந்த 12 ஆண்டுகளாக திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலைப்பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர் நாட்டில்அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டபோது, ‘நவிரமலை கல்வெட்டை’ கண்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்த்துறை பேராசிரியர் க.மோகன்காந்தி கூறும் போது, ‘‘சங்க இலக்கியத்துக்கும் ஜவ்வாதுமலைக்கும் நீண்ட தொடர்பு உள்ளது. பத்துப்பாட்டில் ஒரு நூலான மலைபடுகடாமில் ஜவ்வாதுமலையை பற்றி குறிப்பு உள்ளது. மலைபடுகடாமின் பாட்டுத் தலைவனான நன்னன் சேய் நன்னன், நவிரமலையை தம் ஆளுமையின் கீழ் ஆண்டு வந்தார். அந்த மலையின் பழங்குடி மக்கள் பலர் அங்கு வாழ்ந்து வந்தனர் என சங்க நூலான மலைபடுகடாமில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலைபடுகடாம் கூறும் நவிரமலை என்ற சொல்லாட்சி கல்வெட்டுகள் எங்கள் ஆய்வுக்குழுவினரால் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு அதை வெளிப்படுத்தப்பட்டும் வருகிறது. அந்த வகையில், தற்போது மேலும் ஒரு நவிரமலை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர்நாடு ஊராட்சி, முழலை கிராமத்தில் முழலை நாதர் (சிவபெருமான்) கோயில் உள்ளது. இதன் வலது பக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் 2 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகள் சிவபெருமான் கோயிலுக்கு தானமாக வழங்கியதாக தெரிகிறது. இதன் மூலம் நவிரமலையில் சிவபெருமான் வீற்றிருந்தார் என்பது தெரிகிறது.பிற்கால நாயக்கர் காலத்தில் நவிரமலையில் முழலை நாதர் வீற்றிருக்கிறார் என்ற செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
சங்க காலம் தொட்டு நவிரமலை என்ற பெயர் வழக்கு சோழர், நாயக்கர் காலம் வரை அதே பெயரிலேயே இருந்து வந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வாசனைப் பொருட்கள் அதிகமாக கிடைத்ததால் ஜவ்வாதுமலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இம்மலைக்கு பண்டைய பெயரான நவிரமலை என்றே பெயர் சூட்ட வேண்டும் எனஎங்கள் ஆய்வுக்குழு தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை மூலம் தெரிவித்து வருகிறோம். புதூர்நாட் டில் கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் சிவபெருமான் கோயிலுக்கு அறப்பணி செய்ய தேவதானம் கொடுத்த செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இறைவன் சொத்தை தவறாக பயன்படுத்துவோர் பசுவைக் கொன்ற பாவத்துக்கு ஆளாகிப் போவார்கள் என இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்காலங்களில் பசுவை கொல்வது என்பது மிகுந்த பாவம் கொடிய செயல் எனக்கருதியுள்ளனர். தவறு செய்பவர்கள் பசுவைக்கொன்ற பாவத்துக்கு ஆட்படுவார்கள் என இக்கல்வெட்டு கூறுகிறது.
இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள ஈசன் நவிரமலை முழலை உடையார் என அழைக்கப்பட் டுள்ளார். ஜவ்வாதுமலையின் பண்டைய பெயரான நவிரமலை என்ற சொல்லாட்சியும் இக்கல் வெட்டில் இடம்பெற்றுள்ளது.
இக்கல்வெட்டானது தானம் வழங்கிய கல்வெட்டு என்பதால் இதில், சூரியன், சந்திரன், சூலா யுதம், குத்துவிளக்குப்படங் களோடு சைவ கோயிலுக்கு கொடுத்த தானச்செய்தியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தொல்லியல் துறையினர் பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT