Last Updated : 07 Mar, 2021 03:36 PM

 

Published : 07 Mar 2021 03:36 PM
Last Updated : 07 Mar 2021 03:36 PM

100 சதவீத வாக்குப்பதிவு: தூத்துக்குடியில் ஸ்கேட்டிங், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு

தூத்துக்குடி ரோச் பூங்காவில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஸ்கேட்டிங், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. | படம்: என்.ராஜேஷ்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி, நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ரோச் பூங்காவில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி, பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளான சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ரங்கோலி கோலம் வரைதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சியும், மாதிரி வாக்குச்சாவடி அமைத்து வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கலந்துகொண்டு ஸ்கேட்டிங் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி பேரணியைத் தொடங்கி வைத்தார். மேலும் கையெழுத்து இயக்கத்தைக் கையெழுத்திட்டுத் தொடங்கி வைத்தார். வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போடப்பட்ட ரங்கோலி கோலத்தைப் பார்வையிட்டார். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்படுவதைப் பார்வையிட்டார்.

பின்னர் மாவட்டத் தேர்தல் அதிகாரி செந்தில் ராஜ் கூறியதாவது:

''சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மின்சார வாரியம் மற்றும் தனியார் நிறுவனங்களில் வழங்கப்படும் ரசீதுகளில் 100 சதவீதம் வாக்களிப்போம், தேர்தல் நாள் ஏப்ரல் 6 என்பன போன்ற விழிப்புணர்வு சீல் வைத்து வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 20 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது. 18 வயது நிரம்பிய அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அதற்கு முன்னதாக தற்போதே உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதையும், வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடி எங்கு உள்ளது குறித்தும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் ஏப்ரல் 6-ம் தேதி கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். வாக்காளர்கள் தங்கள் குடும்பத்தினர் மட்டுமின்றி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்''.

இவ்வாறு செந்தில் ராஜ் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஸ்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், கூட்டுறவு காய்கறி விற்பனை அங்காடி நிர்வாக இயக்குநர் அந்தோணி பட்டுராஜ், வட்டாட்சியர் ஜஸ்டின், சாரா கலைக்குழு அமைப்பாளர் முபாரக், சகா கிராமிய கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சங்கர் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x