Published : 07 Mar 2021 01:59 PM
Last Updated : 07 Mar 2021 01:59 PM
புதுச்சேரியில் இன்று காங்கிரஸ்-திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. மாநில அந்தஸ்தை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸுக்கு தொகுதிகளைப் பங்கீடு செய்வதில் கடும் இழுபறி நிலவியது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 25 சட்டப்பேரவைத் தொகுதிகளும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் வழங்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழகத்தைத் தொடர்ந்து புதுவை காங்கிரஸ், திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து இன்று புதுவை காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது.
பேச்சுவார்த்தையில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, திமுக அமைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார், சிவா எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்றனர்.
தொகுதிப் பங்கீடு குறித்து 30 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், "காங்கிரஸ் கட்சித் தலைமை மற்றும் திமுக தலைமை ஒப்புதலுடன் திமுக அமைப்பாளர்களுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மதவாத சக்திகளை எதிர்கொள்ள இரு கட்சிகளுக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி பிரச்சினை அவர்களது விவகாரம். அதில் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மற்றும் புதுச்சேரி மாநிலத்தைக் காப்பாற்றுவோம் என்ற கருத்தை மையமாக முன்வைத்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இரு கட்சி வட்டாரங்களிலும் விசாரித்தபோது, "புதுச்சேரி காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, தங்களுக்குக் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரியுள்ளது. அதோடு மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதி ஒதுக்க வேண்டும் எனப் பேசியுள்ளது. புதுவையைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்கி வந்துள்ளது. தற்போது காங்கிரஸில் ஏற்பட்ட விரிசலால் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் வெளியேறிவிட்டனர்.
இதனை திமுக சாதகமாகப் பயன்படுத்தி கூடுதல் தொகுதியைக் கேட்டுள்ளது. இருப்பினும் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைதான் நடந்துள்ளது. தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தையில் தொகுதிகள் பங்கீடு செய்யப்படும்" எனத் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT