Published : 07 Mar 2021 01:03 PM
Last Updated : 07 Mar 2021 01:03 PM
வியாபாரிகள் மீது அன்பு, பாசம் வைக்க வேண்டியதுதான். ஆனால், மக்கள் மீதான பாசத்துக்குப் பின்தான் அது இருக்கவேண்டும். அம்பானி, அதானி மீது அமித் ஷா கருணை, கரிசனம் காட்டட்டும். ஆனால், மக்கள் நலன் முக்கியமாக இருக்கட்டும் என்று கமல் பேசினார்.
சென்னையில் நேற்று பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் பேசியதாவது:
“தாய்மார்கள் விறகு அடுப்பில் புகைந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு சிலிண்டர் ஆசையைக் காட்டிவிட்டு அதையும் இப்போது அவர்கள் கையில் கிடைக்காமல் செய்துவிட்டார்கள். விலையேற்றி விட்டார்கள். பெரிய சிலிண்டர் 56 இன்ச் அளவு அல்லவா? பணமதிப்பு நீக்கம் கொண்டு வந்தபோது ஏதோ நல்லது நடக்கப்போகிறது என்று சபாஷ் என்று சொல்லிவிட்டேன், என்னை அறியாமல்.
நல்லது எங்கிருந்தாலும் அதை எடுத்துக்கொள்ளும் தன்மை மய்யத்துக்கு உண்டு. அதன் பின்னர் செய்வதையெல்லாம், செய்து சுரண்டுவதெல்லாம் தெரிய ஆரம்பித்துவிட்டது. அதனால்தான் அதன் மீது டார்ச் அடிக்கிறோம்.
நான் நேற்று புத்தகக் கண்காட்சியில் பேசிக் கொண்டிருந்தேன். ஒருத்தர், அடடா! தமிழ் கத்துக்காம போனோமே என்று வருத்தப்படுகிறார். நான் கூட ஒரு இந்திப் படத்தில் நடித்திருந்தேன். ஒரு பெண்ணுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதுபோல் நடித்தேன். அது சினிமா. அது எந்த அளவுக்கு வாழ்க்கையில் பொருந்துமோ தெரியாது.
ஆனால், புத்தகக் கண்காட்சியில் 30 நாளில் இந்தி மூலம் தமிழ் கற்கலாம் என்ற புத்தகம் உள்ளது. இன்னும் 32 நாள்தான் உள்ளது. அதற்குள் தமிழ் கற்றுக்கொள்ளட்டும் பாவம். வந்துதான் பார்க்கட்டுமே. கமல் கில்த்தாஹே, கமல் கில்த்தாஹே என்கிறார்கள். சரி ஆசைப்பட்டுச் சொல்கிறார்கள். சரிதான் அது. நாங்கள் தமிழர்கள் முடிவு செய்துள்ள கமல் வேறு. அது உங்கள் கமல் இல்லை என்று சொல்ல வேண்டும்.
வியாபாரிகளிடம் நம்பிச் சில விஷயங்களைக் கொடுக்க வேண்டும். முன்னர் பெரிய பெரிய வியாபாரிகள் வணிகர்கள் எல்லாம் மன்னருக்குப் பின்னோராக இருப்பார்கள். அவர்களை நம்பி நாட்டையே நம்பி ஒப்படைப்பார்கள். அவர்கள் மன்னருக்குப் பின்னோராக இருப்பார்கள். ஆனால், இன்று பணக்காரர்களுக்குப் பின்னால் நம் அரசும், அதிகாரமும் ஒண்டிக் கொண்டிருக்கிறது. அவர்களை அண்டிப் பிழைக்கிறது.
அமித் ஷாவுக்கு அம்பானி, அதானியைப் பிடித்திருக்கலாம். ஆனால், அதைவிட மக்களைப் பிடித்திருக்க வேண்டும். அன்பு யாரிடமும் காட்டலாம். கனிவு, கரிசனம் காட்டலாம். ஆனால், மக்களுக்கு மேல் அது இருக்கக் கூடாது. அதன் பிறகு நீங்கள் எவ்வளவு பெரிய பக்தனாக இருந்து எனக்கென்ன?
ரொம்பப் பேசாதீர்கள் தண்டனை அனுபவிப்பீர்கள் என்கிறார்கள். கொடுங்கோலர்கள் ஆட்சியில் தண்டனை கிடைத்தால் நாங்கள் தியாகியாகத்தான் இருப்போம். நீங்கள் எங்களைத் தியாகியாக்கினால் வரவேற்கத் தயார்”.
இவ்வாறு கமல் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT