Last Updated : 15 Nov, 2015 12:40 PM

 

Published : 15 Nov 2015 12:40 PM
Last Updated : 15 Nov 2015 12:40 PM

உயர் நீதிமன்றத்தில் முதல் முறையாக ‘ஸ்கைப்’பில் வழக்கு விசாரணை: சென்னையில் இருந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் முறையாக செல்போனில் ஸ்கைப் வசதியை பயன்படுத்தி வழக்கு விசாரிக்கப்பட்டு நேற்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு அறையில் நடைபெற்ற விவாதங்களை சென்னையில் தனது வீட்டில் இருந்தவாறு ஸ்கைப்பில் பார்த்தும், கேட்டும் உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி எஸ்.வைத்தியநாதன்.

ராமநாதபுரம் மாவட்டம், ஓடைக்கல் அடைக்கல மாதா ஆலயத்தில் இன்று திருமணம் நடத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விடுமுறை நாளான நேற்று அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து உயர் நீதிமன்ற நிர்வாக நீதிபதி வி.ராமசுப்பிரமணியம் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க வேண்டிய நீதிபதி எஸ்.வைத்தியநாதன், சென்னையில் இருந்ததால், இந்த வழக்கை வீடியோ கான்பரன்சிங்கில் விசாரிக்குமாறு அவரை நீதிபதி ராமசுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, போலீஸ் பாதுகாப்பு கோரி தாக்கலான மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதனுக்கு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை நீதிபதி படித்து முடித்தார். உயர் நீதிமன்ற கிளை வீடியோ கான்பரன்சிங் அறையில் இருந்து, நீதிபதியின் செல்போனுக்கு ஸ்கைப் வசதி மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் வழக்கறிஞர் வி.பன்னீர்செல்வம், அரசு வழக்கறிஞர் சந்திரசேகர் ஆகியோரின் வாதங்களை ஸ்கைப் வழியாக பார்த்து கேட்டறிந்த நீதிபதி, இருதரப்பினரிடமும் சில கேள்விகளை எழுப்பி பதில் பெற்றார். 15 நிமிடங்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர், இன்று கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் நடத்தவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், ஆலயத்துக்கு வெளியே திருமண ஊர்வலம் நடத்தக்கூடாது என நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.

செல்போன் வழியாக நீதிபதி பிறப்பித்த உத்தரவை, உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதியின் உதவியாளர்கள் உடனடியாக தட்டச்சு செய்து மனுதாரர் வழக்கறிஞரிடம் அளித்தனர்.

பிரதான மனு மீதான விசாரணை 18.11.2015-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x