Last Updated : 07 Mar, 2021 03:15 AM

 

Published : 07 Mar 2021 03:15 AM
Last Updated : 07 Mar 2021 03:15 AM

விழுப்புரத்தில் பெண்களுக்காக ஒரு நூலகம்

ஒன்றுமே செய்யாமல், எதையோ செய்து விட்டதாக விளம்பரம் தேடிக் கொள்ளும் மனிதர்கள் அதிகரித்து வரும் காலம் இது. அதற்கு மத்தியிலும் எண்ணற்றோர், சத்தமில்லாமல் தங்களது நடப்பு பணிக்கு நடுவே, நற்பங்களிப்பைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றனர்.

அதற்கு அண்மைய உதாரணம், விழுப்புரம் அரசு மகளிர் பள்ளியில் உருவாகியிருக்கும் பெண்களுக்கான நூலகம்.

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் கட்டிடம் நூற்றாண்டைக் கடந்தது. இங்கு பழுதடைந்த நிலையில்பயன்படுத்த முடியாமல் தளவாடச் சாமான்கள் குவித்து வைக்கப்பட்ட கிடங்கு ஒன்று இருந்தது. தற்போது அது அழகிய நூலகமாக உருவெடுத்திருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, சிலந்தி வலையில் சிக்கித் தவித்த அந்தக் கட்டிடம் புது பொலிவு பெற்றிருக்கிறது. இனி ஒன்றுக்கும் உதவாது எனக் கைவிடப்பட்ட இருக்கைகள், சிற்சில பழுது பார்ப்புக்குப் பின் பொலிவாய் மின்னுகின்றன.

இன்னும் சில நாட்களில் இந்த நூலகம் முறைப்படி திறக்கப்பட்டு, மாணவிகளுக்கு நல்ல வாசிப்பு அனுபவத்தை தரப் போகிறது.

இதுபற்றி இப்பள்ளியின் பள்ளித் தலைமை ஆசிரியையும், முன்னாள் மாணவியுமான சசிகலாவிடம் பேசினோம். அவர் கூறியது:

“பழுதடைந்து இருக்கும் இக்கட்டி டத்தை என்ன செய்யலாம் என சக ஆசிரியைகளுடன் சேர்ந்து யோசித்தோம். அந்த யோசனையின் விளைவு, இது நூலகமாகியிருக்கிறது.

பள்ளி மாணவிகள் மட்டுமல்லாமல், போட்டித்தேர்வுக்கு ஆயத்தமாகும் முன்னாள் மாணவிகள் மற்றும் பெண்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எளிய செலவில், அழகிய வடிவில் இந்த நூலகம் உருவாக விழுப்புரம் நகர விஸ்வகர்மாவினர் இலவசமாக இருக்கைகளை வடிவமைத்து தந்துள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனின் வேண்டுகோளை ஏற்று, விழுப்புரம் போலீஸார் மற்றும் சமூக ஆர்வலர்கள் புத்தகங்களை வைக்க தேவையான அலமாரிகள், புத்தகங்களை வாங்கி கொடுத்து வருகின்றனர்.

இத்தகவல்அறிந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா எங்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்.

விரைவில் திறப்புவிழா நடைபெறும் இந்நூலகத்திற்கு நூலகரை பணியமர்த்த மாவட்ட நூலகர் சுப்பிரமணியனை கேட்டுள்ளோம். அவரும், அரசின் அனுமதியுடன் விரைவில் நூலகரை பணியமர்த்த உள்ளார்.

ஆட்சியரிடம் தேதி பெற்று, அவர் மூலம் இந்நூலகம் திறந்து வைக்கப்படும்

சுமார் 10 ஆயிரம் புத்தகங்களை வைக்கத் திட்டமிட்டுள்ளோம்“ என்று கூறிக் கொண்டே, தலைமை ஆசிரியர் சசிகலா நூலகத்தைச் சுற்றி காட்டினார்.

பழமை மாறாமல் புதுப்பித்திருக் கிறார்கள். ஒரு நல்ல வாசிப்பிற்கான சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே, பள்ளியில் சிறிய அளவில் இயங்கி வந்த நூலகத்தில் இடம் பெற்றிருந்த புத்தகங்களை இந்த புதிய அறைக்கு இடம் மாற்றியிருக் கிறார்கள்.

மாணவிகள் மட்டுமின்றி, நம் விழுப் புரம் நகரப் பெண்கள் பயன்படுத்த நல்ல தொரு நூலகம் தயாராகி இருப்பதை கண்ட போது மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த புதிய நூலகத்திற்கு சமூக ஆர்வலர்கள் தங்களால் முடிந்த புத்தகங்கள், மேசைகள், நாற்காலிகள், அலமாரிகளை வழங்கலாம். வழங்க விரும்புவோர் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைத் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x