Published : 07 Mar 2021 03:15 AM
Last Updated : 07 Mar 2021 03:15 AM
விழுப்புரம் மாவட்டத்திற்கு என்று நீண்ட காலமாக தீர்க்க முடியாத சில சிக்கல்கள் உண்டு.
அதில் ஒன்று, கிராமப் பகுதிகளில் நிலவும் கள்ளச் சாராய விற்பனை. 1980 முதலே முற்றிலும் கள்ளச் சாராயத்தை ஒழிக்க தீவிர கவனம் செலுத்தப்பட்டு வரும் மாவட்டங்களில் விழுப்புரமும் ஒன்று.
பல்வேறு சமூக நோக்குடன், அரசு இந்தப் பிரச்சினையை கையாண்டு வருகிறது. காவல்துறையினர் தொடர்ந்து கள்ளச் சாராய விற்பனையாளர்களை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். திருந்தி வாழ முயல்வோருக்கு உரிய கடனுதவி அரசால் அளிக்கப்பட்டு, நல்வழி காட்டப்பட்டு வருகிறது. ஆனாலும், பிரச்சினை தொடரவே செய்கிறது.
இதற்கு மத்தியில் விழுப்புரத்தில் மாவட்டத்தில் செஞ்சி அருகே கடம்பூர், விக்கிரவாண்டி அருகே ஆசூர், திண்டிவனம் அருகே ஆல கிராமம் உள்ளிட்ட 30 கிராமங்கள் கள்ளச் சாராயம் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, “கள்ளச் சாராய விற்பனையை தடுப்பதை விட அத்தொழிலில் ஈடுபடுவோருக்கு மாற்றுத் தொழிலை அமைத்து கொடுப்பதே சரியாக இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் ஒவ்வொரு கிராமங்களிலும் பெண்கள் கண்காணிப்பு குழுவை உருவாக்கியிருக்கிறோம்.
அக்குழுவினர் உதவியோடு கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மாற்றுத் தொழிலுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்யும் என சொல்லி, புரிய வைத்து நல்வழி காட்டுகிறோம்.
அவர்கள் சிறு தொழில்களை செய்ய கடனுதவி வழங்க பரிந்துரை செய்து, அவர்களுக்கு இலகுவாக, அவர்கள் செய்யக் கூடிய வகையிலான மாற்றுத் தொழிலை மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு அமைத்து தருகிறோம்.
இப்படிச் செய்ததில், கடந்த சில மாதங்களில், மாவட்டம் முழுவதும் 30 கிராமங்களை கள்ளச் சாராயம் இல்லாத கிராமங்களாக மாற்றியிருக்கிறோம். ‘இவை கள்ளச் சாராயம் அறவே நீக்கப்பட்ட கிராமங்கள்’ என்று அறிவித்திருக்கிறோம்’‘ என்றார்.
இது குறித்து மேலும் விவரங்களுக்கு மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலர்களிடம் பேசினோம்.
“விழுப்புரம் மாவட்டத்தில் 936 கிராமங்கள் உள்ளன. அவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கள்ளச் சாராயச் சிக்கல் இருந்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இதை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம்.
கள்ளச் சாராய விற்பனையில் இருந்து விடுபட தயாராக இருந்தவர்களுக்கு காவல்துறையின் பரிந்துரையின் பேரில் வங்கிகள் சிறு, நடுத்தர கடன்களை வழங்கி வருகின்றன.
திருந்தி வாழ முற்படுவோருக்கு, மாவட்ட நிர்வாக பரிந்துரையின் பேரில் ஆட்டுப் பண்ணை வைக்க, கறவை மாடுகள் வளர்க்க வங்கிகள் உடனே கடன் தருகின்றன.
விழுப்புரம் நகரில் உள்ள பெரிய காலனி, அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரபாண்டி, திண்டிவனம் அருகே ஆல கிராமம், விக்கிரவாண்டி அருகே ஆசூர், செஞ்சி அருகே கடம்பூர் கிராமங்களில் உள்ளவர்களுக்கு கடன் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப பணிவாய்ப்பு பெற்றுத் தந்திருக்கிறோம்.
மேலும், அவர்கள் மீண்டும் கள்ளச் சாராய விற்பனைக்கு செல்கிறார்களா என தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’‘ என்றார்.
காவல்துறையினர் கூறியதைக் கேட்டு, அதை அறியும் ஆர்வத்தில், திண்டிவனம் அருகேயுள்ள ஆல கிராமத்திற்குச் சென்றோம். அங்குள்ளவர்களிடம் பேசினோம்.
“அடிப்படையில் எங்கள் கிராமம் நல்ல அமைதியான கிராமம். ஒரு சிலரால் இந்த அவப்பெயர் ஏற்பட்டது. தற்போது அதுவும் சரியாகி இருக்கிறது” என்றனர். கேட்ட நமக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
‘அந்த கிராமத்தின் தொடக்கப் பள்ளி அருகில் சென்று பாருங்கள்; கள்ளச் சாராயம் இங்கு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது’ என்று போர்டு வைக்கப்பட்டிருக்கும் என்று காவல்துறையினர் கூறியது நினைவுக்கு வர, அங்கு சென்றோம்.
அவர்கள் கூறியபடியே போர்டு இருந்தது. ஆனால், அந்த போர்டு முழுமையாக கிழிக்கப்பட்டு இருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த நம்மிடம், “பக்கத்து கிராமங்களில் விற்கப்படும் கள்ளச் சாராயத்தை குடித்து விட்டு வந்து அழிச்சாட்டியம் செய்யும், சில விஷமிகளின் வேண்டாத நடவடிக்கை இது. பக்கத்து கிராமங்களிலும் கள்ளச் சாராயத்தை ஒழிக்க வேண்டும் அப்போதுதான் இத்திட்டம் முழுமை பெறும்” என்று கிராமவாசிகள் சொல்ல, இதில், அரசும், அரசோடு சேர்ந்து சமூக அக்கறை கொண்ட பலரும் இன்னும் நெடுந்தொலைவு பயணப்பட வேண்டியது இருப்பது புரிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT