Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM
நாட்டில் அனைத்து மாநிலங்களில் மட்டுமில்லாமல் இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் பாஜகவின் ஆட்சி அமைக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டமிடுவதாக திரிபுராவின் முதல்வர் பிப்லப் குமார் தேவ் கடந்த பிப்ரவரியில் பேட்டி அளித்திருந்தது சர்ச்சையானது. இத் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் இலங்கை பாரதிய ஜனதா கட்சி எனும் பெயரில், அந்நாட்டில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்த செய்தியாளர்கள் சந் திப்பு யாழ்ப்பாணம் ஊடக மையத்தில் நேற்று நடைபெற்றது.
இலங்கை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் வி.முத்துசாமி கூறியதாவது:
இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இலங்கை பாரதிய ஜனதா கட்சி, ஆங்கிலத்தில் லங்கா பாரதிய ஜனதா பார்ட்டி என்றும், சிங்களத்தில் லங்கா பாரதிய ஜனதா பக்சய என்று அழைக்கப்படும்.
இலங்கையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சி கள் உள்ளன என்றாலும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை புறந் தள்ளிவிட்டு, தங்களின் தனிப்பட்ட நோக் கங்களை முன்னிறுத்திய கட்சிகளாகவே அவை செயல்படுகின்றன. இதனால் தமிழ் மக்கள் மத்தியில், அந்தக் கட்சிகள் நிலையாக நிற்க முடியவில்லை.
மற்ற கட்சிகள் போல வாக்குறுதிகளை வழங்காமல், தமிழ் மக்களுக்கான கல்வி, பொருளாதார மேம்பாடு, விளையாட்டு கலாச்சார மேம்பாட்டுத் திட்டங்களில் கவனம் செலுத்த உள்ளோம். இலங்கை பாரதிய ஜனதா கட்சி அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் உயர்த்தும் கட்சியாகச் செயல்படும்.
இலங்கை பாரதிய ஜனதா கட்சியின் முதல் பணியாக தமிழ் கல்வி மாநாடு நடத்தி, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தமிழ் பேசும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான ஆலோசனை களையும், ஒத்துழைப்பையும் தமிழ் மக்களிடம் கோருகிறோம்.
மேலும் இந்தியாவில் இயங்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும், தங்கள் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இவ்வாறுஅவர் கூறினார்.
இலங்கை பாஜக செயலாளராக எம்.இந்திரஜித், பொருளாளராக வீ. திலான் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள கட்சிகளின் பெயரில் இலங்கையில் கட்சி தொடங்குவது புதிதல்ல. இந்தியாவின் விடுதலை இயக்கமான காங்கிரஸின் செயல்பாடுகளை பார்த்து இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற கட்சி 1919-ல் உருவாக்கப்பட்டது. மேலும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தலைமையிலான இலங்கை சிவசேனை என்ற அமைப்பும் அங்குள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT