Published : 06 Mar 2021 08:34 PM
Last Updated : 06 Mar 2021 08:34 PM

மக்கள் நீதி மய்ய அணியில் காங்கிரஸ்?- கமலுக்கு வந்த தூது; பிரச்சாரத்தை ரத்து செய்து அவசர ஆலோசனை 

சென்னை

திமுக கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்காததால் வருத்தத்தில் இருந்த நிலையில், காங்கிரஸுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்தது. இதனால் மாலையில் மக்கள் நீதி மய்யத்துக்கு காங்கிரஸ் கொடுத்த சிக்னல் காரணமாகப் பிரச்சாரக் கூட்டத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் கமல் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கேட்ட தொகுதிக்கும், திமுக சொன்ன தொகுதிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் எந்தக் காலத்திலும் சந்தித்தது இல்லை என செயற்குழுக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்கலங்கிக் கூறும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதை கேள்விக்குள்ளாகியது என்கிற கருத்து பரவலாகப் பேசப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இருப்பை தமிழகத்தில் இல்லாமல் செய்ய நினைக்கும் திமுகதான் பாஜகவின் பி டீம் என கமல் குற்றம் சாட்டி, அதை காங்கிரஸ் புரிந்துகொண்டு செயல்பட்டால் நல்லது எனக் கூறியிருந்தார். மநீம பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் பகிரங்கமாக காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, திமுகவுடன் பேச்சுவார்த்தை சம்பந்தமாக செய்தியாளர்கள் கேள்விக்குப் பிடிகொடுக்காமல் பதிலளித்தார். இந்நிலையில் இன்று மாலை பிரச்சாரத்தில் இருந்த கமல் தரப்புக்கு காங்கிரஸிடமிருந்து அழைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாகப் பிரச்சாரத்தில் பேசுவதைப் பாதியிலேயே விட்டுவிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை என கமல் கிளம்பிச் சென்றுவிட்டார்.

மநீமவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை மூலம் திமுகவுக்கான எச்சரிக்கையை காங்கிரஸ் விடுக்கிறதா? அல்லது மநீமவுடன் கூட்டணிக்கே செல்கிறதா என்பது அடுத்தடுத்த நிகழ்வுகள் மூலமே தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x