Published : 06 Mar 2021 08:15 PM
Last Updated : 06 Mar 2021 08:15 PM
எடப்பாடி ராசியானவர்; மீண்டும் முதல்வராவார் என பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
மதுரை புதூர் பகுதியில் பாஜக சார்பில் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகத்தை தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி இன்று திறந்து வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் கிடைத்துள்ளன. ஓரிரு நாட்களில் பாஜக போட்டியிடும் தொகுதிகளை அறிவிப்போம்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும் 234 தொகுதிகளில் வெற்றி பெறப் பாடுபடுவோம். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தொடரும்.
தமிழகத்திற்கு ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மோடி வழங்கியுள்ளார். தமிழகத்திற்கு மெட்ரோ ரயில், எய்ம்ஸ் தந்தவர் மோடி. திமுக-காங் கட்சிகள் தமிழகத்தின் எதிரி. ஜல்லிட்டுக்கு தடை விதித்தது காங்கிரஸ் அரசு அதனை மீட்டு தந்தது பாஜக அரசு.
பாஜக தான் தமிழ் மொழியையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாதுகாத்துவருவதால் தமிழகத்தின் நண்பனாக உள்ளோம். ஸ்டாலினோடு ஒப்பிடுகையில் எடப்பாடி சிறப்பாக செயல்படுகிறார். எடப்பாடி எளிமையானவர், ஸ்டாலின் அகம்பாவம் பிடித்தவர். எடப்பாடி ராசியானவர் என்பதால் மீண்டும் முதல்வர் ஆவார். காங்கிரஸ் - திமுக குடும்ப வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் தாமரையோடு, இரட்டை இலை சின்னமும், மாம்பழ சின்னமும் எங்களுடையது தான் என்ற எண்ணத்தோடு பணியாற்றுகிறோம். தேமுதிகவுடனான கூட்டணி குறித்து அதிமுகதான் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
பாஜக அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்கிறது. பாஜக தேசிய கட்சி என்பதால் ஆங்கிலம், இந்திக்கு முக்கியத்துவம் தருவோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT