Published : 06 Mar 2021 07:52 PM
Last Updated : 06 Mar 2021 07:52 PM
மதிமுகவின் ஆற்றலைத் திமுகவுக்காகப் பயன்படுத்துவோம் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.
ஏப்.6 அன்று தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இன்று (மார்ச் 06) மாலை 6.30 மணியளவில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இருவரும் கையெழுத்திட்டனர். 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட உள்ளது.
இதன் பின்னர், வைகோ செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
எந்தெந்தத் தொகுதிகள் என உத்தேசப் பட்டியல் அளித்துள்ளீர்களா?
இல்லை.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்?
குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பொதுவான சின்னம் கிடைக்கும். இல்லையென்றால் ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்படும். இந்த நெருக்கடியான சூழ்நிலையைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுத்துள்ளோம். பிரச்சாரம் மேற்கொள்ள 12 நாட்களே உள்ளன. குறைந்த கால அளவில் தனிச்சின்னத்தை மக்களிடம் சேர்ப்பது நடைமுறை சாத்தியம் இல்லை.
மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வீர்களா?
மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன். சனாதன இந்துத்துவ சக்திகள் மூர்க்கத்தனமாகச் செயல்பட்டு, பெரியார், அண்ணாவின் திராவிட இயக்க பூமியில் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பில் ஈடுபட்டு சனாதனத்தைக் கொண்டு வர முயல்கின்றன.
திராவிட இயக்க பூமியில் பாஜகவின் ஏவல்களாக வருகின்ற சக்திகளை முறியடிக்க திமுகவுக்கு முழு ஆதரவு தருவோம். "உங்களுக்குப் பக்கபலமாக இருந்ததைப் போல ஸ்டாலினுக்கும் இருப்பேன்' என கருணாநிதியின் கடைசிக் காலத்தில் நான் கூறினேன். அந்த உறுதிமொழியைக் காப்பாற்றுவேன். மதிமுகவின் ஆற்றலைத் திமுகவுக்காக நாங்கள் பயன்படுத்துவோம்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் இணைவது எப்படி இருக்கிறது?
மகிழ்ச்சியாக இருக்கிறது.
உடன்பாடு எட்டப்பட்டதில் ஏன் காலதாமதம்?
காலதாமதம் இல்லை. இரு முறை நடந்தது. இது 3-வது முறை.
ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழகத்திற்கு முதல்வராக வரக்கூடிய தகுதி கொண்ட தலைசிறந்த முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்.
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT