Published : 06 Mar 2021 07:29 PM
Last Updated : 06 Mar 2021 07:29 PM
‘‘மூன்றாவது அணி மீது நம்பிக்கை கிடையாது,’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடியில், இன்று அவர் காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசியதாவது:
தமிழகத்தில் இந்தத் தேர்தல் அனைத்துக் கட்சிகளுக்கும் முக்கியமான தேர்தல். இந்திய அளவிலும் முக்கியத் தேர்தல். பாஜகவை உறுதியாக கடுமையாக எதிர்க்கிறேன். அதில் சமரசமே இல்லை. பாஜகவை அரசியல் கட்சியாக பார்க்க வேண்டாம். அது நச்சு இயக்கம். திராவிடர் உணர்வுகள், தேசிய உணர்வுகள், தமிழ் உணர்வுகளுக்கு நேர் எதிரான கட்சி. வடநாடு முழுவதும் அந்த நச்சுச் செடி பரவிவிட்டது. அந்த மாநிலங்களில் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதைத் தடுக்க அந்தந்த மாநில தேசிய கட்சித் தலைவர்கள், மாநிலக் கட்சித் தலைவர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
தென்நாட்டை பொறுத்தவரை பாஜகவிற்கு கர்நாடக மாநிலம் மட்டுமே உள்ளது. அதுவும் நமது தவறான உத்திகளால் அவர்களது கைக்கு போய்விட்டது. அந்நிலை மாறிவிட வாய்ப்புள்ளது. பாஜகவை விந்திய மலைக்கு தெற்கே வராமல் தடுக்க இந்தத் தேர்தலால் தான் முடியும். அவர்கள் தமிழகம், புதுச்சேரியில் காலூன்ற வேண்டும் என முயற்சிக்கின்றனர். கேரளாவில் முடியாததால் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
மேலும் தமிழகத்தில் நமது சோர்வினால் நாம் பழியாகிவிடுவோம் என்று அச்சமாக உள்ளது. அதிமுக ஏற்கெனவே அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டனர். பாஜகவிற்கு 20 தொகுதிகளில் வேட்பாளர்களே இருக்காது. மிருக அதிகாரத்தை காட்டி தொகுதிகளைப் பெற்றுள்ளனர்.
பாஜக ஒன்று, இரண்டில் ஜெயிக்க வாய்ப்புள்ளது. அதைக் கூட நாம் வெற்றி பெறவிடக் கூடாது. அதிமுக பெரிய கட்சி என்பதால் பல இடங்களில் வெற்றி பெறும். ஆனால் பாஜ எந்த இடத்திலும் வெற்றி பெறக் கூடாது. தென்மாநிலங்களில் தேசியக் கட்சி முகம் என்பது காங்கிரஸ் மட்டும் தான். பாஜக காலூன்றிவிட்டால் அது தேசியக் கட்சி முகமாக மாறிவிடும்.
கம்யூ., கட்சி கூட மாநில கட்சி தான். கேரளா, மேற்குவங்கத்தில் மட்டுமே உள்ளது. தேசியக் கட்சி முகம் காங்கிரஸூக்கு மட்டுமே உள்ளது. அதை பாஜ நிரப்பப்பார்க்கிறது. நான் வலிமையான தேசியக்கட்சி என்பதை நிருபிக்கும் களமாக இந்தத் தேர்தலை பாஜக பார்க்கிறது.
அவர்களைத் தேர்தலில் தோற்றகடிக்காவிட்டால் நம்முடைய இடத்தை பாஜக பெற்றுவிடும். ஒரு தேசியக் கட்சி என்பதால் தான் வாஜ்பாய்க்கு பிறகு நமது கட்சித் தலைமையில் ஆட்சி அமைந்தது. அந்த இடத்தை விட்டுவிடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் எனக்கு பாஜக என்ன தந்திரம், எந்திரத்தை பயன்படுத்தினாலும் அச்சமில்லை. என்னை பயமுறுத்தி ஒன்றும் செய்ய முடியாது என பாஜகவிற்கே தெரிந்துவிட்டது. கேரள முதல்வர் மீதான குற்றச்சாட்டு கேவலமானது. கேரளாவில் காங்கிரஸூக்கு விரோத கட்சி தான் கம்யூ., அதற்காக அவர் மீதான குற்றச்சாட்டை நான் நம்ப மாட்டேன். அவரை கொள்கை ரீதியாக எதிர்க்கலாம். பதுக்கலில் ஈடுபட்டுள்ளார் என்று கூறுவதை நம்ப முடியுமா? அனைத்து அரசியல்வாதிகள் எல்லோரும் அயோக்கியர்கள். பாஜகவினர் மட்டுமே யோக்கியர்கள். அதேபோல் அவர்களிடம் சரணடைபவர்களும் யோக்கியர்கள். அதாவது பழனிசாமி, பன்னீர்செல்வம் யோக்கியர்கள்.
பாஜக வேரூன்றுவதைத் தடுக்க துடிப்பான தலைவர்கள், இளைஞர்கள் எனக்குத் தேவை. நான் என்ன இன்னும் 5 (அ) 7 ஆண்டுகள் தான் அரசியலில் இருப்பேன். நீங்கள் தான் தொடர்ந்து செயல்படுவீரர்கள். இந்த நாட்டில் சர்வாதிகார ஆட்சி வருவதை விரும்பலாமா? மதுரை எம்பி வெங்கடேசனுக்கு இந்தியில் கடிதம் வந்தது. அதைத் திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால் எனக்கு இந்தியில் கடிதம் வந்தால் சுக்குநூறாக கிழித்து அப்படியே திருப்பி அனுப்பிவிடுவேன்.
அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர்கள் முதல்வராக வரக் கூடாது. பாஜகவை எதிர்க்கும் மம்தா பானர்ஜியை பாராடுகிறேன். அவருக்கான துணிவு இளைஞர் காங்கிரஸூல் இருந்து வந்தது. ஒருவேளை ஓபிஎஸ், இபிஎஸ் இளைஞர் காங்கிரஸில் இருந்து வந்திருந்தால் அடிமைசாசனம் எழுதி கொடுத்திருக்க மாட்டார்கள். இந்தியாவின் அடுத்த 3 ஆண்டுகளை தீர்மானிக்கும் தேர்தல். பாஜகவிற்கு நிற்கும் இடங்களில் நான் பிரச்சாரத்திற்கு செல்வேன். திமுக கூட்டணியில் இருந்தால் தான் பாஜகவை எதிர்க்க முடியும், என்று பேசினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரிய முதலாளிகள் வழங்கிய 90 சதவீதம் பணம் ஒரே ஒரு கட்சிக்கே சென்றுள்ளது. 7 துறைமுகங்கள், 2 தேசிய வங்கிகள், ஒரு காப்பீட்டு கம்பெனியை தனியாருக்கு ஒதுக்கின்றனர். அவற்றை யாருக்கு ஒதுக்க வேண்டும் என்பதை ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர்.
எந்தத் தொகுதியிலும் பாஜக வெல்லக்கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டியில் கொண்டு வருவதில் என்ன பரிசீலிக்க வேண்டியுள்ளது. முடிவு எடுக்க வேண்டியவர்களே பரிசீலிப்பேன் எனக் கூறுவது என்ன நியாயம். இதில் இருந்து அவர்களுக்கு அதில் விருப்பமில்லை என்பதே தெரிகிறது.
கரோனா தொற்று காலத்திலேயே இலவசமாகக் கொடுத்த பொருட்களுக்கே அதிமுக படங்களை வைத்துக் கொடுத்தனர். அதை உயர் நீதிமன்றம் சென்றே தடுத்து நிறுத்தினர். பணம் கொடுப்பதற்காக அதிமுக டோக்கன் கொடுப்பது அக்கட்சிக்கு கை வந்த கலை.
மேலும் அதைச் சொல்லிக் கொடுக்க பெரிய வாத்தியாரான தற்போது பாஜகவும் உள்ளது. மூன்றாவது அணி மீது நம்பிக்கை கிடையாது. தபால் வாக்குகளில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது, என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT