Published : 06 Mar 2021 06:58 PM
Last Updated : 06 Mar 2021 06:58 PM
கரோனா தாக்கம் காரணமாக உயர் நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனத் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வண்ணம் வழக்கறிஞர்கள் தரப்பில் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தாக்கம் மீண்டும் உருவெடுத்துள்ளதால், சென்னை உயர் நீதிமன்றத்துக்குள் மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் தவிர பிறருக்கு அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கரோனா ஊரடங்கை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள வழக்கறிஞர் அலுவல் அறைகள் கடந்த 300 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தன. தற்போது மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு தளர்வுகளை அறிவித்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளையில் வழக்கறிஞர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கரோனா தாக்கம் மீண்டும் உருவெடுத்துள்ளதால், சென்னை உயர் நீதிமன்றம், மதுரைக் கிளையில் மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் நேரடியாகவும், மற்ற வழக்கறிஞர்கள் காணொலி மூலமாகவும் மட்டும் ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மார்ச் 8-ம் தேதி முதல், மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள் தவிர வேறு எவருக்கும் அனுமதியில்லை எனவும், வழக்கறிஞர் அறைகள் மூடப்படும் எனவும் தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்களின் அறைகளை மீண்டும் மூடுவதால் நீதிமன்றப் பணிகளும் வெகுவாக பாதிப்படையும், வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும் எனக் கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மார்ச் 8-ம் தேதி நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட இருப்பதாக சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT