Published : 06 Mar 2021 04:18 PM
Last Updated : 06 Mar 2021 04:18 PM
தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
தமிழகத்திற்கு ஏப். 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சரியாக ஒருமாத காலமே உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் என இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. தேமுதிகவுடன் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைவாக உள்ளதாக, தேமுதிக அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (மார்ச் 6) மாலை இரு கட்சிகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, பிப். 25 முதல் தேமுதிக விருப்ப மனுக்களைப் பெற்றது. நேற்றுடன் (மார்ச் 5) விருப்ப மனுத் தாக்கல் நிறைவடைந்தது. இன்று முதல் 8-ம் தேதி வரை விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும் என, தேமுதிக அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று காலை முதல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. விஜயகாந்த், இதற்கு முன்பு, பிப். 12 அன்று தேமுதிக கொடி நாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் கொடியேற்றினார். அதன் பின்னர், நேர்காணல் நிகழ்வில்தான் விஜயகாந்த் கலந்துகொள்கிறார்.
இன்று நடைபெற்று வரும் நேர்காணலில் கோவை, கடலூர், கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மயிலாடுதுறை, நாகை, நெல்லை, நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது, எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பன போன்ற வழக்கமான கேள்விகள் நேர்காணலில் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தேர்தலில் போட்டியிட தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் விருப்ப மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT