Published : 06 Mar 2021 02:23 PM
Last Updated : 06 Mar 2021 02:23 PM
அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுவதாக, கருணாஸ் அறிவித்துள்ளார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் நடிகருமான கருணாஸ், அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏப். 6 அன்று நடைபெற உள்ள தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் பாமக 23, பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுவதாக கருணாஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (மார்ச் 6) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதல்வர் பழனிசாமி வன்னியர் சமுதாயத்தையும், அவர் சார்ந்த சமுதாயத்தையும் கையிலே எடுத்து, ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமுதாயத்தையும் புறந்தள்ள முடிவெடுத்திருக்கிறார். ஒருசில தலைவர்கள் நாங்கள் சார்ந்த சமுதாயத்தை குற்றப்பரம்பரையினர் என கீழ்த்தரமாக விமர்சிக்கின்றனர். அவை 'மீம்ஸ்'களாக சமூக வலைதளங்களில் வலம்வந்துகொண்டிருக்கின்றன. நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல, கொற்றப் பரம்பரை.
அடிப்படை இட ஒதுக்கீடு கோரி நீண்ட நாட்களாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. மறுக்கப்படுகின்றன. இச்சமுதாயத்தைப் புறந்தள்ளி, முதல்வரும் இச்சமுதாயத்தைச் சார்ந்த 8 அமைச்சர்களும் துரோகம் இழைத்திருக்கின்றனர்.
சமூக நீதியில் முதல்வர் பழனிசாமி எண்ணற்ற சமுதாயங்களைப் புறந்தள்ளி, தன் அரசியல் ஆதாயத்துக்காக அவசரக் கோலத்தில் செயல்படுகிறார். அன்புமணி, முதல்வரைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அப்பேற்பட்டவர்களின் கோரிக்கைகள் அரசியலுக்காக நிறைவேற்றப்படுகின்றன.
அதனால், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட முக்குலத்தோர் புலிப்படை, அதிமுக கூட்டணியிலிருந்து விடுவித்துக் கொள்கிறது. எங்கள் சமுதாயம் பெரும்பான்மையாக இருக்கும் 84 தொகுதிகளில் இளைஞர்களை ஒன்றிணைத்து நானே களமிறங்கி இந்த அரசுக்கு எதிராக, எங்களுக்கு செய்த துரோகம் செய்தவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வோம். நாங்கள் இல்லாமல் எவரொருவரும் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை எடுத்துக் காட்டுவோம்.
அதிமுக அனைத்து சமுதாயங்களையும் ஒன்றிணைத்து ஒருதாய் மக்களாக பாவித்த இயக்கம். ஆனால், அதிமுகவை வன்னியர்கள், அவர் சார்ந்த சமுதாயத்துக்கான அமைப்பாக மாற்றிக் கட்டமைத்திருக்கிறார் முதல்வர். இது வளர்ச்சிக்கான பாதை அல்ல, அழிவுக்கான பாதை. ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவில் 75 லட்சம் பேர் முக்குலத்தோர்தான்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தான் சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்படவில்லை, சட்டப்பேரவை உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்கிறார் பழனிசாமி. ஆனால், என்ன நடந்தது என்பதை உலகமே பார்த்தது. கூவத்தூரில் ஜெயலலிதாவின் உருவப்படத்தின் முன் அகல் விளக்கை வைத்து, சசிகலாவிடம் சத்தியம் செய்ததை அவர்களால் மறுக்க முடியுமா? நானும் தனியரசுவும் அப்போது இருந்தோம். நாங்கள் இருவரும்தான் சத்தியம் செய்யவில்லை. ஏனென்றால் நாங்கள் இருவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் இல்லை. என்ன சத்தியம் செய்தார்கள் என்பது அவர்களுக்கும் சசிகலாவுக்கும் தான் வெளிச்சம்".
இவ்வாறு கருணாஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT