Published : 06 Mar 2021 12:34 PM
Last Updated : 06 Mar 2021 12:34 PM
காங்கிரஸ் கட்சிக்கு எம்எல்ஏ, எம்.பி. பதவிகள் கிடைக்காமல் செய்பவர்கள்தான் பாஜகவின் 'பி' டீம் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மமகவுக்கு 2 தொகுதிகள், விசிகவுக்கு 6 தொகுதிகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு குறைவான தொகுதிகளை திமுக ஒதுக்க முன்வந்ததாகவும், இதனால் காங்கிரஸ் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இதனால் வருத்தமடைந்து கட்சியினரிடையே பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை, கொளத்தூரில் நேற்று (மார்ச் 5) நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், "காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது பாஜகவின் திட்டம். அப்படி அவர்கள் திட்டமிட்டிருக்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு எம்எல்ஏ, எம்.பி. பதவிகள் கிடைக்காத அளவுக்கு, அவர்களுடைய இருப்பை இல்லாமல் செய்துகொண்டிருக்கும் இவர்கள்தான் பாஜகவின் 'பி' டீம். இது இந்நேரம் காங்கிரஸுக்குப் புரிந்திருக்க வேண்டும். புரியவில்லையென்றால் அனுதாபம் மட்டும்தான் சொல்ல முடியும்" எனப் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT