Published : 06 Mar 2021 12:25 PM
Last Updated : 06 Mar 2021 12:25 PM

1967-ல் திமுக முதன்முதலாகப் பொறுப்பேற்ற நாள்; மீண்டும் ஆட்சி அமைக்க சூளுரைப்போம்: ஸ்டாலின் 

சென்னை

இந்தியத் தேர்தல் வரலாற்றில் மாநிலக் கட்சி முதன்முதலாக ஆட்சி அமைத்த நாள். 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் (மார்ச் 6/ 1967) இன்று. இதே நாளில் மீண்டும் திமுக ஆட்சி அமைய சூளுரைப்போம் என ஸ்டாலின் முகநூலில் பதிவு செய்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி:

“இந்தியப் பொதுத் தேர்தல் ஜனநாயக வரலாற்றில், முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த அரிய சாதனையைப் படைத்த அண்ணா முதல்வராகவும், தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் அமைச்சர்களாகவும், தமிழில் பதவியேற்பு நிகழ்வினை நடத்தி, உளமார உறுதிமொழி கூறிப் பொறுப்பேற்ற நாள் இன்று.

6-3-1967-ல் நிகழ்ந்த அந்த மகத்தான மாற்றத்திற்கான நிகழ்வின் தொடர்ச்சியாகத்தான், 'தமிழ்நாடு' என்ற நமக்கே உரிமை உடைய பொருத்தப் பெயர் அமைந்தது. மாநில உரிமைகள் மக்களிடையே பேசு பொருளாகி வலிமை பெற்றன. அதனைத் தொடர்ந்து, தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் தமிழகம் படிப்படியாகப் பல படிகள் வளர்ச்சி பெற்றது.

தமிழர்கள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் கண்டனர். பார் வியந்த அந்த வளர்ச்சியை, கடந்த பத்தாண்டு காலமாகப் பின்னுக்குத் தள்ளி, நிர்வாகச் சீர்கேடுகளாலும், ஊழல் முறைகேடுகளாலும் மோசமான நிலையை உருவாக்கி, மாநில உரிமைகளையும் அடமானம் வைத்துள்ள அதிமுக ஆட்சியாளர்களை விரட்டியடித்து, அண்ணா - கருணாநிதி வழியில், திமுக ஆட்சி அமைந்திட உடன்பிறப்புகள் அனைவரும் இந்நாளில் உறுதியேற்றுச் சூளுரைப்போம்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x