Published : 06 Mar 2021 10:30 AM
Last Updated : 06 Mar 2021 10:30 AM
திமுக கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மதிமுகவும் இன்று தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. உடன்பாடு எட்டப்பட்டு நல்ல முடிவு வரும் என இரு தரப்பிலும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன. கூட்டணி என்பதைத் தாண்டி ஒரே வகையான கொள்கைக்காக ஓரணியில் நின்று போராடும் தோழமைக் கட்சிகள் என அதன் தலைவர்கள் சொல்வதுண்டு.
ஆனால், திமுக அறுதிப் பெரும்பான்மை பெற வேண்டும் என்கிற உந்துதலும், அதிக இடங்களைப்பெறும் கட்சிகள் வெல்ல முடியாமல் போவதும், தனிச் சின்னங்களைப் பெற்று நிற்பதால் வெற்றி வாய்ப்பு கிடைக்காமல் போவதும், கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை அளிக்க வேண்டும் என்கிற முடிவுக்கு திமுகவைத் தள்ளியது.
5 ஆண்டுகள் ஒருமித்து உடன் நின்ற கட்சிகளுக்கு கவுரவமான தொகுதிகளை அளிப்பதால் திமுகவின் அறுதிப் பெரும்பான்மை பாதிக்கப்படாது என்பதே கூட்டணிக் கட்சிகளின் வாதமாக உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரி கட்சிகள் திமுக அளிப்பதாகச் சொன்ன தொகுதிகளின் எண்ணிக்கையால் வருத்தம் அடைந்தன.
கூட்டணியில் தொடரலாமா? என்கிற ஆலோசனையும் நடந்ததாகக் கூறப்பட்டது. கூட்டணியில் மமக, முஸ்லிம் லீக் முதலில் ஒப்பந்தம் போட்டது. தொடர்ந்து விசிக 6 தொகுதிகள் தனிச் சின்னம் என ஒப்பந்தம் போட்டது. மீண்டும் இழுபறி நடந்த நிலையில் அதே 6 தொகுதிகள் என்கிற எண்ணிக்கையுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பந்தம் போட்டது.
6 தொகுதி எண்ணிக்கை முக்கியமல்ல, மதச் சார்பற்ற அணி அமைய வேண்டும் என்பதே லட்சியம் என முத்தரசன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. 6 அல்லது 7 தொகுதிகளுடன் கூட்டணி உறுதியாகும் என இரு தரப்பிலும் தெரியவந்துள்ளது.
மதிமுக உயர்நிலைக் கூட்டத்தை இன்று கூட்டுகிறது. அதற்கு முன் தொகுதி பேச்சுவார்த்தைக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார் வைகோ. தனிச் சின்னத்தில் போட்டி என்பதில் உறுதியாக இருக்கும் வைகோ, இன்று நடக்கும் கூட்டத்தில் மதிமுக கேட்கும் தொகுதிகள் பெறுவது அல்லது 2011 போல் ஆதரவு மட்டும் தந்துவிட்டு தேர்தலைப் புறக்கணிப்பது என்கிற நிலையை எடுப்பாரா? என்பது தெரியவரும்.
ஆனால், மதிமுக தரப்பில் 7 தொகுதிகள் வரை பேசி உடன்பாடு வரும் என்று தெரிவிக்கின்றனர். காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே கேட்கும் தொகுதிகளைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டால் கையெழுத்திட மட்டுமே வருவோம், இனி பேச்சுவார்த்தை இல்லை என்று முடிவெடுத்ததால் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment