Published : 06 Mar 2021 09:54 AM
Last Updated : 06 Mar 2021 09:54 AM
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறித்துப் பரவலாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், 6 தொகுதிகளுக்கு விசிக ஒப்புக்கொண்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:
"திமுக கூட்டணி மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. பாஜக போன்ற சனாதான கட்சிகளை தமிழகத்தில் காலூன்றவிடாமல் மேற்கொள்ளும் முயற்சி அது. இத்தகைய சூழலில் எத்தனை தொகுதிகளைப் பெறுகிறோம் என்பதைவிட கூட்டணியின் லட்சியமே முக்கியம். இந்தச் சூழ்நிலையில் கூட்டணியிலிருந்து தொகுதிப் பங்கீடு பிரச்சினைக்காக வெளியேறுவது சரியானதாக இருக்காது. அதை விசிக எப்போதும் செய்யாது. அதன் காரணமாகவே 6 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டோம். இந்த 6 தொகுதிகளும் நிச்சயமாக வெற்றித் தொகுதியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதேவேளையில், திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியிருப்பதையும் ஏற்கிறேன். திமுக தோழமைக் கட்சிகளை நிச்சயமாக அரவணைத்துச் செல்ல வேண்டும்.
அதேபோல், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாது என்பதும் உண்மை. தமிழகத்தில் 10 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சியில் இருந்துள்ளது. எல்லா இடங்களிலும் ஊழல் மலிந்துள்ளது. மக்கள் மத்தியில் ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, எதிர்ப்பு அலை உள்ளது. அந்த அலை வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் அதிருப்தி இருப்பது நிச்சயம். இந்தச் சூழலில் திமுக கூட்டணி நிச்சயமாக 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம்".
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறேன் என்று சசிகலா அறிவித்துள்ளது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த திருமாவளவன், "தேர்தல் அரசியலில் இருந்து இப்போதைக்கு ஒதுங்கியிருக்கிறேன் என்ற தொனியிலேயே சசிகலா அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது இந்த முடிவுக்கு உண்மையிலேயே உடல்நிலை காரணமாக இருக்கலாம். அப்படியில்லாவிட்டால் பாஜகவின் அழுத்தம் காரணமாக இருக்கலாம். பாஜக இந்தியா முழுவதுமே இப்படியான அழுத்த அரசியலைத்தான் செய்து கொண்டிருக்கிறது. அண்மையில் இதை நாம் புதுச்சேரியில் கண்டோம். அமித் ஷா மேற்கொண்ட அதிமுக- அமமுக இணைப்பு முயற்சி வெற்றிபெறாத சூழலில் சசிகலா இந்த ஒதுங்கல் அறிக்கையை வெளியிட்டிருக்கலாம் என்றே நான் கருதுகிறேன்" எனத் தெரிவித்தார்.
வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு தற்காலிகமானது. சாதிவாரி கணக்கெடுப்பின்படி இல்லாமல் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு வெற்று அறிவிப்பு, தேர்தலுக்கான அறிவிப்பு என்றும் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
கமலுக்கு பதிலடி:
விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்து விமர்சித்த மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், இது தான் சமூக நீதியா எனக் கேள்வி எழுப்பியிருந்தார். கமலின் இந்தக் கருத்து குறித்து பதிலளித்த திருமாவளவன், "நாங்கள் இதற்குமுன் தோல்விக் கூட்டணியில் இருந்தோம். இப்போது நாங்கள் இருப்பது வெற்றிக் கூட்டணியில். அத்தகைய கூட்டணியில் 6 தொகுதிகள் என்பது பெரிய விஷயம்.
ஒருவர் புறநகரில் ஏக்கர் கணக்கில் இடம் வாங்குவதற்கும், நகர்ப்பகுதியில் சென்ட் கணக்கில் இடம் வாங்குவதையும் ஒப்பிட்டால் நகர்ப்புற இடத்துக்கே மதிப்பு அதிகம். இதை ஒரு சான்றாக, வெற்றிக் கூட்டணியில் நாங்கள் பெற்றுள்ள 6 இடங்களைக் கருதலாம். இருப்பினும் கமல்ஹாசன் எங்கள் மீது காட்டிய கரிசனத்துக்கு மிக்க நன்றி" எனக் கூறினார்.
இந்தத் தேர்தலில் பாஜக, அதிமுக, பாமக மதவாத அரசியல், சாதி அரசியலைக் கையில் எடுத்துள்ளது. இந்த அரசியலைத் தோற்கடிப்பதே திமுக கூட்டணியின் இலக்கு என்றும் திருமாவளவன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT