Published : 06 Mar 2021 09:42 AM
Last Updated : 06 Mar 2021 09:42 AM
தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளிப்பவர்கள் மத்தியில், தலைவர்களை நேரில் பார்க்கவும், புகைப்படம் எடுக்கவுமே விருப்ப மனு தாக்கல் செய்தேன் என துரைமுருகன் தொகுதியில் விருப்ப மனு தாக்கல் செய்த கட்சித் தொண்டர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களை விருப்ப மனு தாக்கல் செய்ய வைத்து பின்னர் நேர்காணலுக்கு அழைத்து அதன் பின்னர் தேர்வு செய்வது வழக்கமான நடைமுறை. இதில் தங்கள் கட்சித் தலைவருக்கும், விரும்பும் நபர்களுக்கும் ஏராளமானோர் பணம் கட்டி விருப்ப மனு போடுவது வழக்கம்.
அதேபோன்று கட்சித் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிட யாரும் விருப்ப மனு போடமாட்டார்கள். ஆனால் வேலூர், காட்பாடி தொகுதியில் போட்டியிடும் துரைமுருகன் போட்டியிடும் தொகுதியில் ராம்குமார் என்பவரும் விருப்ப மனு தாக்கல் செய்தது அனைவரது புருவத்தையும் உயர்த்தியது. கட்சியின் பொதுச் செயலாளர் 50 ஆண்டுகாலம் தேர்தலில் தொடர்ச்சியாகப் போட்டியிடும் துரைமுருகன் 1991-ல் மட்டும் தோல்வியைத் தழுவியுள்ளார். 10-வது முறையாகப் போட்டியிடும் அவர் 8-வது முறையாக காட்பாடியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அவரது தொகுதியில் ஒருவர் விருப்ப மனு தாக்கல் செய்வதா? என திமுகவுக்குள்ளேயே பரபரப்பு ஏற்பட்டது. துரைமுருகனையும், ராம்குமாரையும் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று நேர்காணல் செய்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த துரைமுருகன், நான் யாரையும் நிர்பந்திப்பதில்லை. இதுபோன்ற விஷயங்களை நான் ஊக்குவிப்பேன். இதனால் கட்சிக்கு வருமானமும் கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோன்று தான் ஏன் விருப்ப மனு தாக்கல் செய்தேன் என்பதற்கு பதில் தெரிவித்த ராம்குமார், நான் போட்டியிட வேண்டும் என்பதற்காக விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. தலைவர்களை நேரில் பார்க்கவும், பேசவும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவே விருப்ப மனு தாக்கல் செய்தேன் என்கிற வினோத விளக்கத்தை அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT