Published : 23 Jun 2014 10:28 AM
Last Updated : 23 Jun 2014 10:28 AM
கணவனை இழந்தோருக்கான சர்வதேச தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
கணவரை இழந்த நிலையிலும் உழைப்பால் வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் பெண்கள் தங்கள் அனுபவங்களை தெரிவிக்கின்றனர்.
சூளைமேடு நமச்சிவாய புரத்தில் இட்லி கடை வைத்திருக்கும் தேன் மொழி தனது கணவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு இழந்துவிட்டார். குடி பழக்கத்துக்கு அடிமையாகியிருந்த அவரது கணவர் மஞ்சள் காமாலையால் இறந்துவிட்டார். தனது 3 குழந்தைகளையும் தனியாளாக இருந்து காப்பாற்றி வருகிறார். தேன்மொழி கூறுகையில், “எனது பெற்றோர் இறந்து விட்டனர். எனது கணவர் வீட்டிலிருந்து யாரும் உதவுவதில்லை. எனது பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டி சேர்த்து வைத்த சொத்து என்று எதுவும் இல்லை. ஆனால், எனது பேர குழந்தைகளுக்கு அந்த நிலை வரக்கூடாது. அதற்காக, நான் யாரிடமும் உதவி கேட்டு நிற்க மாட்டேன். எனது இட்லி கடை எனக்கு கை கொடுக்கும். பத்தாவது படிக்கும் எனது மகள் கலெக்டராக வேண்டும் என்கிறாள். எட்டாவது படிக்கும் மகள் டாக்டராக வேண்டும் என்கிறாள். ஆண்டவன் துணையோடு அவர்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
கணவனை இழந்தவர்கள் வாழ தகுதியற்றவர்கள் என்ற கருத்து பல இடங்களில், பல வடிவங்களில் இன்றும் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால்,அதையும் தாண்டி, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் இவர்கள்.
ஏழு ஆண்டுகளாக கணவனை இழந்து வாழும் கலைச்செல்வி கூறுகையில், “எனது கணவர் குடிப்பழக்கத்தால்தான் உயிரிழந்தார். அவர் இருக்கும் போது அவரால் ஏற்பட்ட துன்பங்கள் அதிகம். எனினும், அவர் இறந்த பிறகு அக்கம் பக்கத்தில் உள்ள ஆண்களின் பார்வை தவறாக இருக்கிறது. நான் கணவனை இழந்திருப்பதால், இரவு நேர காப்பாளர் வேலைக்கு அழைக்கிறார்கள். ஆனால், நான் எல்லா சவால்களையும் எதிர்கொண்டு எனது 2 பிள்ளைகளுக்காக வாழ்வேன். அவர்கள்தான் எனது வாழ்க்கையின் நம்பிக்கை” என்கிறார்.
தமிழக விதவைப் பெண்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சா. பால் மைக்கேல்ராஜ் கூறுகையில், “கணவனை இழந்தவர்கள் பற்றிய சமூகப்பார்வை மாற வேண்டும். அவர்களுக்கான தனி சட்டம் இயற்ற வேண்டும். அரசு உதவித் தொகையை பெறுவதற்கு 40 வயதாகி இருக்க வேண்டும், 18 வயதுக்கு மேல் உள்ள மகன் இருக்கக் கூடாது, குடும்ப அட்டைகளை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை களைய வேண்டும்” என்றார்.
லயோலா கல்லூரியின் இளம் விதவைகளுக்கான வாழ்வாதாரத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரியா கூறுகையில், “சென்னையின் குடிசைப் பகுதிகளில் அதிக விதவைகளை நாங்கள் கண்டறிந்து வருகிறோம். இதில் 90 சதவீதம் குடும்பங்களில் குடிப்பழக்கத்தினால்தான் கணவர்கள் உயிரிழக்கின்றனர். இளம் விதவைகளுக்கு பள்ளி செல்லும் குழந்தைகள் இருப்பதால், அவர்களுக்கான பொருளாதார சுதந்திரம் மிகவும் அவசியமாகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT