Published : 05 Mar 2021 07:03 PM
Last Updated : 05 Mar 2021 07:03 PM

பள்ளிக்கு தாமதம்; தண்டனை அளிக்கப்பட்ட மாணவன் மரணம்: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

தாமதமாக பள்ளிக்கு வந்ததால் அளிக்கப்பட்ட தண்டனையால் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர், நிர்வாகி ஆகியோர் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியதை அடுத்து வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை திருவிக நகர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த முரளி என்பவரின் மகன், பள்ளிக்கு தாமதமாக வந்ததால் பள்ளி மைதானத்தை சுற்றி வாத்து நடை போடும்படி தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி வாத்து நடை மேற்கொண்டிருந்த மாணவன், திடீரென மயங்கி விழுந்தான். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த மாணவனை, பரிசோதித்த மருத்துவர்கள், மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, மாணவனின் தந்தை முரளி அளித்த புகாரின் அடிப்படையில், திருவிக நகர் போலீசார், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெய் சிங், தலைமை ஆசிரியர் அருள், தாளாளர் ஜோசப் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.

எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மகனைப் பறிகொடுத்த தந்தைக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

ஏற்கனவே இடைக்கால இழப்பீடாக வழங்கப்பட்ட 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் போக, மீதமுள்ள 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை வழங்கியதையடுத்து, பள்ளி உடற்கல்வி ஆசிரியர், தலைமையாசிரியர் மற்றும் தாளாளருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் உடற்பயிற்சியின் அறிவியல் பூர்வமான வளர்ச்சிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x