Published : 05 Mar 2021 04:37 PM
Last Updated : 05 Mar 2021 04:37 PM

இதுபோன்ற சூழ்நிலையை நான் சந்தித்ததே இல்லை; கண்கலங்கிய கே.எஸ்.அழகிரி: கூட்டணியை மறுபரிசீலனை செய்கிறதா காங்கிரஸ்?

சென்னை

திமுக கூட்டணியுடன் இணைந்து மதச்சார்ப்பற்ற போராட்டம், தமிழக நலனுக்காக போராடிய காங்கிரஸை தற்போது சில சீட்டுகளுக்காக நடத்தும் விதத்தை நான் இதுவரை சந்தித்ததே இல்லை என பேசிய கே.எஸ்.அழகிரி கண் கலங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் தொடருவது குறித்து மறுபரிசீலனை செய்வது குறித்து முடிவெடுக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

திமுகவுடன் 5 ஆண்டுகாலம் கூட்டணி கட்சிகள் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து கூட்டியக்கம் நடத்தியதன் மூலம் திமுக அணி பலமான அணியாக தமிழகத்தில் இருந்து வருகிறது. திமுகவுக்கு ஆதரவான அலை அடிக்கிறது என்பது அரசியல் ஆர்வலர்கள் கணிப்பாக இருந்தது.

மக்களவை தேர்தலில் ஒன்றுபட்ட அணியாக ஒரே சிந்தனையுடன் திமுக அணி வலுவாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரே அணியாக இல்லாத நிலையில் திமுகவில் சிறு அளவில்கூட சுணக்கம் இல்லாத கூட்டணியாக விளங்கியது. இதன் விளைவே மக்களவை தேர்தலில் 98% இடங்களை திமுக பெற்றது.

ஆனால் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிய நிலையில் திமுகவுடன் அதே தோழமையுடன் கேட்ட சீட்டுகள் கிடைக்கும் என்று போன அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது. அது கடந்த நான்கு நாட்களாக தொடருவதுதான் சோகம். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், மதிமுகவினர் மேலுக்கு கூட்டணி பேச்சு வார்த்தை சுமுகாமாக போகிறது என பேசினாலும் உள்ளுக்குள் சொல்ல முடியாமல் தவித்து வருவதை காணமுடிகிறது.

திமுக பேச்சுவார்த்தை குழுவினரின் கறார் பேச்சை இதற்கு முந்தைய திமுக கூட்டணி பேச்சு வார்த்தைகளில் நாங்கள் பார்த்ததே இல்லை என அனைத்து கூட்டணிக்கட்சிகளில் சென்றவர்களில் கூற்றாக உள்ளது. திமுக காங்கிரஸ் பேச்சு வார்த்தையில் திமுக இன்றளவும் கறாராக நிற்பது காங்கிரஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 தொகுதிகளுக்கு மேல் இல்லை என்று திமுக உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஏன் இந்தக்கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியுள்ளது, அனைவரும் தலைமையை வலியுறுத்த வேறு வழியில்லாமல் காங்கிரஸ் தலைமை அடுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து அவசர செயற்குழுவை இன்று கூட்டியது என்கின்றனர்.

திமுக மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு அழைத்திருப்பதாகவும், 24 தொகுதிகள் தர உத்தேசித்துள்ளதாகவும் வரும் தகவல் அனைத்தும் உண்மையல்ல நடைமுறை வேறு என்று தெரிவித்த காங்கிரஸ் தரப்பு நிர்வாகி ஒருவர் செயற்குழு கூட்டத்தில் நடந்ததே வேறு எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தரப்பில் கவுரவமான தொகுதிகள் பெற பெரும் போராட்டம் நடத்துகிறது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், டெல்லி மேலிட தலைவர்கள் தனிப்பட்ட முறையில் பேசியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என தெரிவித்தார், திமுக நடத்தும் விதம் இதற்கு முன்னர் இல்லாத ஒன்று என தெரிவித்த அவர் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் பற்றி விவரித்தார், கூட்டத்தில் அனைவரும் கொந்தளிப்பான மனநிலையுடன் மேலிடம் ஏதோ அணுசரித்து போவதாக பேச அவர்கள் முன் பேசிய கே.எஸ்.அழகிரி குரல் உடைந்து பேசியுள்ளார்.

திமுக சொல்வதும் நாம் கேட்கும் தொகுதி எண்ணிக்கையும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கிறது, இன்றைக்கு நாம் ஒப்புக்கொண்டால் வருங்காலத்தில் தமிழகத்தில் கட்சி இல்லாமலே போய்விடும். இதற்காகவா இத்தனைக்காலம் ஒன்றுப்பட்டு கூட்டியக்கம் நடத்தினோம்.

மதச்சார்ப்பற்ற கூட்டணியாக தமிழகம் முழுவதும் ஒன்றிணைந்து போராடி இந்த அணி வலுவாக காலூன்றி அதிமுக-பாஜக அணி தோற்கடிக்க போராடியது இதற்காகவா? நமது தேசிய தலைவர்கள் எத்தனை தடவை தமிழகம் வந்து இந்தக்கூட்டணிக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என பேசிய கே.எஸ்.அழகிரி ஒரு கட்டத்தில் கண்கலங்கி இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை நான் இதற்கு முன் சந்தித்ததே இல்லை, கங்கிரஸ் பேரியக்கம் இதற்கு ஒப்புக்கொண்டால் நாம் நாளை மதிப்புமிக்க அரசியல் செய்ய முடியாது என பேசியுள்ளார்.

ஒரு கட்டத்தில் கட்சி மேலிடம் என்ன முடிவெடுத்தாலும் நீங்கள் கட்டுப்படுவீர்களா? எனக்கேட்க அனைவரும் கட்டுபடுகிறோம் என ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். வருங்காலத்தின் நலன் கருதி காங்கிரஸ் கவுரவமான நிலையை எடுக்கலாம் எனத் தெரிவித்த அவர் இன்னும் ஓரிரு நாளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா? விலகுமா? என்ற எந்த முடிவெடுத்தாலும் கட்சியில் 100% அனைவரும் ஒத்துழைக்கும் முடிவுக்கு வந்துவிட்டோம்,

கவுரவமான தொகுதிகள் அளிக்கப்படாவிட்டால் காங்கிரஸ் வெளியேறும் வாய்ப்பும் உள்ளது என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கேட்பது 30-க்குள் கவுரவமான எண்ணிக்கை, திமுக சொல்வது 18 தொகுதிகள் இருவரும் ஒருவர் ஏறி வர ஒருவர் இறங்கி வந்தால் கூட்டணி தொடர வாய்ப்புள்ளது. இனி பேச்சுவார்த்தை என வந்து அவமானப்பட விரும்பவில்லை வந்தால் தொகுதியை இறுதிப்படுத்தி கையெழுத்து இடுவதுபோன்று இருந்தால்தான் வருவோம் என தெரிவித்துள்ளதாக கூறப்ப்டுகிறது. அதனால் இன்றும் காங்கிரஸ் திமுக பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x