Published : 05 Mar 2021 03:38 PM
Last Updated : 05 Mar 2021 03:38 PM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் என்ன நிலைப்பாடு அல்லது யாருக்கு ஆதரவு என்பது குறித்து ஓரிரு நாட்களில் ரஜினிகாந்த் வெளிப்படையாக தெரிவிக்கவுள்ளதாக அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1996 தேர்தலின்போது யாருக்கு ஆதரவு என்பது குறித்து முதன்முறையாக ரஜினிகாந்த் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார். அவரது வாய்ஸ், ரசிகர்கள் மட்டுமின்றி, வாக்காளர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
அத்தேர்தலில் ரஜினிகாந்த் ரசிகர்கள் திமுக - தமாகா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு கடுமையாகவே உழைத்தனர். அதுமுதல் ஒவ்வொரு பொதுதேர்தலின்போதும் ரஜினிகாந்தின் வாய்ஸ் குறித்த எதிர்பார்ப்பு எழுவது வாடிக்கையாகிவிட்டது.
தற்போதைய தேர்தலுக்குமுன் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, அவர் கட்சி தொடங்காதது பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
ரஜினிகாந்தின் முடிவை ஜீரணிக்க முடியாமல் அவரது ரசிகர்கள் இன்னமும் உள்ளனர். இப்போது தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து தலைவரிடமிருந்து வாய்ஸ் வருமா என்றும் காத்திருக்கிறார்கள்.
ரஜினியுடன் சேர்ந்த அர்ஜூனமூர்த்தி, தொடங்கியுள்ள இந்திய மக்கள் முன்னேற்ற கட்சிக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் உள்ளது. ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் வரும் ரோபோக்களை போன்றே அர்ஜூனமூர்த்தி கட்சிக்கு ரோபோ சின்னம் கிடைத்திருக்கிறது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தலைவரின் நிலைப்பாடு குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும் என்று காத்திருக்கிறோம். இது தொடர்பாக கடந்த சில வாரங்களாகவே தலைமை நிர்வாகிகளுடன் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.
தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஓரிரு நாட்கள் பொறுத்திருக்குமாறு தற்போது நம்பிக்கையான தகவல் வந்திருக்கிறது. நேரடியாக அரசியலில் தலைவர் இறங்கவில்லை என்றாலும், அவரது வாய்ஸுக்கு கட்டுப்பட்டு பணியாற்ற காத்திருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT